PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

 ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: தமிழக நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதே, என்னுடைய ஒரே நோக்கம். நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால் தான், தவறுகள் கண்டதும் பொங்குகிறேன். ம.தி.மு.க.,வில் நிலவிய பிரச்னைகள் தற்காலிகமானது தான். இருந்தாலும், அது தொடர்பான கோபம் இருந்தது. ஆனால், வைகோவின் மனிதநேயத்திற்கு முன், அந்த கோபம் அடிபணிந்து விட்டது.
டவுட் தனபாலு: 'கட்சி பதவியில் இருந்து மகன் விலகக் கூடாது' என, தந்தை உருகியதும், அதைக் கேட்டு மகன் மருகியதும் புல்லரிக்க வைக்குது போங்க... ஆனா, உங்க கட்சிக்கு துாணாக விளங்கிய பல தலைவர்கள் விலகியபோது, உங்க தந்தை இந்த மனிதநேயத்தை ஏன் வெளிக்காட்டவில்லை என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் தியாகராஜனை பொறுத்தவரை, அறிவார்ந்த, வலிமையான வாதங்களை வைப்பவர். இந்த சொல்லாற்றல், அவருக்கு பாதகமாக மாறிவிடக் கூடாது. இதை அவர்மீது கொண்ட அக்கறையுடன் சொல்கிறேன். நான் ஏன் சொல்கிறேன் என, அவருக்கு தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக்கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள். அவர்களின் அவதுாறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது. என் சொல்லை தட்டாத தியாகராஜன், என் அறிவுரையை எடுத்துக் கொள்வார்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, 'ஆட்சிக்கு வந்த ஒரே வருஷத்தில் முதல்வரின் மகனும், மருமகனும் 30,000 கோடி ரூபாயை சம்பாதிச்சுட்டாங்க'ன்னு வாயை விட்டுதான், நிதி அமைச்சரா இருந்த தியாகராஜன், 'டம்மி' பதவியான தகவல் தொழில்நுட்பத் துறைக்கு போயிருக்காரு... 'தேர்தல் நெருங்கும் நேரத்துல, ஏடாகூடமா வாயைவிட்டு, இருப்பதையும் கெடுத்துக்க வேண்டாம்'னு தியாகராஜனை முதல்வர் நாசுக்கா எச்சரிக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: வி.சி., கட்சியில் தற்போது, 144 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக, 234 மாவட்டச் செயலர்கள், அவர்களுக்கு மேலிடப் பொறுப்பாளர்களை நியமிக்க, கட்சித் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். இதற்கு தற்போதைய மாவட்டச் செயலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள்லயே, 234 மாவட்டச் செயலர் கள் இல்லையே... திருமாவளவன் திட்டம் எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா, அவரது கட்சிக்கு பலம் இருக்கிற சில மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்கள்ல, மாவட்டச் செயலர் பதவிக்கு ஆட்கள் கிடைக்குமா என்பது, 'டவுட்' தான்!

