PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

 த.வெ.க., தலைவர் விஜய்: நம் கட்சி மீது, மக்களிடம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தப் போவதே, பூத் லெவல் ஏஜன்டான நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமமானவர்கள். நீங்கள் மக்களிடம் செல்லும்போது, 'உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது?' என, மக்கள் கேட்பர். 'கறை படியாத அரசியலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்; எங்களிடம் நேர்மை, லட்சியம் இருக்கிறது; உழைக்க தெம்பு இருக்கிறது' என்பதை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். மக்கள் உங்களை கட்டாயம் நம்புவர்.
டவுட் தனபாலு: உங்க கட்சியினர் யாரும் இன்னும் பதவி நாற்காலியில் அமராமல் இருப்பதால், கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரங்களா இருக்காங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை... கட்சியில் பதவிகள் வாங்கி தர்றேன்னு பல இடங்கள்ல உங்க நிர்வாகிகள் வசூல் நடத்தியதும், அதை நீங்க கண்டிச்சதையும் யாரும் இன்னும் மறக்கலை என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த்: அடுத்த 10 மாதங்கள் நம் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கடினமாக உழைத்தால் போதும். வரும் 2026ல் முதல்வராக நம் தலைவர் விஜய் பதவியேற்பார்; பதவியில் அமர்ந்த பின், உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வார். தமிழக வெற்றிக் கழகமும் உடனிருக்கும். நீங்கள் தான் தலைவரை, 2026ல் ஆட்சியில் அமர வைப்பீர்கள்; அதற்காக உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
டவுட் தனபாலு: பதவியில் அமர்ந்த பின், கட்சியினருக்கும், அவங்க குடும்பத்துக்கும் விஜய் என்ன கைமாறு செய்வாராம்... திராவிட கட்சிகள் பாணியில, 'கான்ட்ராக்ட், கமிஷன்னு எல்லாமே உங்களை தேடி வரும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதே சமயம், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னையை பற்றியும் பேச வேண்டி உள்ளது. மக்களின் வாங்கும் திறன் குறைந்து உள்ளதாக, சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் கவலை அளிக்கிறது.
டவுட் தனபாலு: காஷ்மீர் சம்பவத்துல அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமா, மத்திய அரசு தீவிரமா ஆலோசனை நடத்திட்டு இருக்கிறப்ப, பொருளாதார பிரச்னையை கிளப்புவது சரியா...? இது, ரோம் நகரே பற்றி எரிஞ்சிட்டு இருந்தப்ப, பிடில் வாசித்த நீரோ மன்னன் கதையா இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

