PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இப்போதுள்ள பா.ம.க., நிர்வாகிகள், மாவட்டம், நகரம், ஒன்றியம் என பதவிகளை வைத்துக்கொண்டு ஏமாற்றுகின்றனர்; உழைக்காமல் வேறு எதையோ செய்கின்றனர். அப்படி இருப்போரின் பொறுப்புகளை பறித்து கணக்கை முடித்து விடுவேன். எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால், நாளை முதல் உழைக்க வேண்டும். அப்படி உழைக்காத நிர்வாகிகளை மாற்ற ஒருவர் வருவார்; அவரை நான் நியமிப்பேன். அந்த கோஷ்டி; இந்த கோஷ்டி என்று சொல்லி இனி ஏமாற்ற முடியாது.
டவுட் தனபாலு: அது சரி... 'அன்புமணி தலைமையில் செயல்படும் நிர்வாகிகள் யாரும் சரியில்லை... இனியும் அவங்க அப்படியே இருந்தால், துாக்கி எறிஞ்சிடுவேன்'னு கட்சியினரை எச்சரிக்கிற சாக்குல, பக்கத்துல இருக்கும் உங்க பாச மகனுக்கும் சேர்த்து எச்சரிக்கை கொடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், மகிழ்வுடன், நலமோடு மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்தது, காவிரி படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தது என, அரும்பணிகள் பல ஆற்றியுள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுடன் சேர்த்து, அ.தி.மு.க.,வையும் ஒருசேர திட்டித் தீர்த்த சீமானிடம் இருந்து பழனிசாமிக்கு வாழ்த்து மழை பொழியுதே... கருத்துக் கணிப்பில் விஜய் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து, அ.தி.மு.க., அணியில் சேர சீமானும் தயாராகிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
நடிகர் ரஜினிகாந்த்: பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி.
டவுட் தனபாலு: இந்தியா - பாகிஸ்தான் இடையே எத்தனையோ போர்கள் நடந்திருக்கு... எல்லாவற்றிலும் இந்தியா தான் ஜெயித்திருக்கு... ஆனாலும், இம்முறை போரை சீக்கிரமாகவே முடிவுக்கு கொண்டு வந்து சேதங்களை குறைத்ததற்காக, பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் மற்றும் நம் வீரர்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்.