PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா: பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன், அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருக்க வேண்டும். அதுபோல, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரையும் நடத்தியிருக்க வேண்டும்; ஏனெனில், இது ஒரு தீவிரமான பிரச்னை. ஆனால், இதில் எதையுமே மத்திய பா.ஜ., அரசு செய்யவில்லை.
டவுட் தனபாலு: போர் துவங்குவதற்கு முன், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினாங்களே... போர் நிறுத்தத்துக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டணுமா...? மத்தியில் உங்க கட்சி தலைமையில் ஆட்சி நடந்தப்ப, தொட்டதுக்கெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துனீங்களா என்ற, 'டவுட்' எழுதே!
மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் வாசுகி: போலீசாரால் கைது செய்யப்படும் போது நன்றாக இருக்கும் கைதிகள், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது எலும்பு முறிவுடன் செல்கின்றனர். கழிப்பறைக்குச் செல்லும்போது அல்லது தப்பியோட முயற்சிக்கும்போது, தடுக்கி விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக சொல்கின்றனர். இது கொஞ்சம்கூட நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும், மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகள் தான் இந்த மாதிரி, 'தடுக்கி' விழுறாங்க... ஆனா, அந்த கைதிகள்கூட, தங்களை போலீசார் தாக்கியதா நீதிமன்றங்களில் எங்கயும் வாக்குமூலம் தரலையே... கைதிகளுக்கு பரிந்து பேசும் நீங்க, அவங்களால பாதிக்கப்பட்ட தரப்பை யோசித்து பார்க்கவே மாட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்: பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும்போது, ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அதன் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, ராகுல் தற்போது அறைகூவல் விடுப்பது ஏன்? இதை புரிந்துகொள்ள முடியவில்லை.
டவுட் தனபாலு: பார்லிமென்ட் நடக்கிறப்ப, அதில் பங்கேற்காமல் வெளிநாடுகளுக்கு டூர் போறது, முக்கிய விவாதங்கள் நடக்கிறப்ப, 'மட்டம்' போடுறது எல்லாம் அவங்களது ஜனநாயக உரிமை... அவங்க கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டை கூட்டினா மட்டும், அங்க வந்து ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்ல போறாங்களா என்ன... அமளியில் இறங்கி, கோஷம் போட்டு வெளிநடப்பு தான் செய்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!