PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க.,வில் இடமில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மேலும் பல கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இணையும்.
டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, அவங்க இருவரும், 'நாங்க தே.ஜ., கூட்டணியில் தான் இருக்கோம்'னு அடிச்சு சொல்றாங்க... பா.ஜ.,வுக்கு நீங்க ஒதுக்கும் தொகுதிகளில், அவங்க இருவருக்கும் உள்ஒதுக்கீடா தொகுதிகள் பிரிச்சு குடுத்தால், அதை நீங்க ஏத்துக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலர் நிர்மல்குமார்: வக்ப் திருத்த சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன; இதில், த.வெ.க.,வும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய, தி.மு.க., அரசு இதை கண்டுகொள்ளவில்லை. எல்லா விஷயத்திலும் மக்களை ஏமாற்றுவது போல, இந்த விஷயத்திலும் தி.மு.க., நாடகமாடி ஏமாற்றுகிறது.
டவுட் தனபாலு: சட்டசபையில் தீர்மானம் போட்டாலே பிரச்னை தீர்ந்துடும் என்றால், இந்நேரத்துக்கு கச்சத்தீவு விவகாரம், காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகள் எல்லாம் தீர்ந்திருக்கணுமே... இந்த பிரச்னைகளில் எல்லாம் தி.மு.க., அரசு வண்டி வண்டியா தீர்மானங்கள் போட்டும் ஏதாவது நடந்திருக்கா... வக்ப் சட்டத்திலும் அதே கதை தான் நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.மா.கா., தலைவர் வாசன்: தமிழகத்தில் பண்ணை வீடுகளில் வசிக்கும் மக்களை கொலை செய்து, கொள்ளை அடிப்பது வழக்கமாக உள்ளது. நெல்லை அருகே காங்., மாவட்ட தலைவர் கொலை, திருப்பூர், சென்னிமலை, சிவகிரியில் நடந்த முதியோர் கொலை சம்பவங்களில் ஒரு துளி கூட ஆதாரத்தை தமிழக போலீசார் கண்டறியவில்லை. தமிழக அரசால் முடியாதென்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டிருக்கலாம்.
டவுட் தனபாலு: கடந்த 2012ல், திருச்சியில் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டாரே... இந்த வழக்கில் நம்ம சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியும் பலனில்லாம, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைச்சாங்க... அவங்களாலும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியலையே... அதனால, சி.பி.ஐ.,க்கும் அடி சறுக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!