PUBLISHED ON : ஜூன் 06, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன்: தற்போது நடக்கும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் குறித்து, நிறைய பேச வேண்டி உள்ளது. அதையெல்லாம் விபரமாக பின்னர் பேசுகிறேன். இப்போதே பேச ஆசைதான்; ஆனாலும், அதற்கான நேரம் இதுவல்ல. நான் மேடையில் பேசும்போது, உயிரே, உறவே, தமிழே என சொல்வதற்கான அர்த்தத்தை முழுதுமாக உணர்கிறேன். உயிரோட்டமான இந்த வார்த்தைகளை தொடர்ந்து சொல்வேன்.
டவுட் தனபாலு: நீங்க என்ன வார்த்தைகளை வேணும்னாலும் சொல்லுங்க... ஆனா, கர்நாடகாகாரங்க, உங்க வாயில இருந்து, 'மன்னிப்பு' என்ற ஒரே ஒரு வார்த்தையை தான் எதிர்பார்க்கிறாங்க... உங்க விருமாண்டி படத்துல, 'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்; மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்' என, நீங்க பேசிய வசனத்தை நீங்களே மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
காங்., கட்சியை சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., மக்களின் காப்பீட்டு பிரீமியங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்ட, 5,000 கோடி ரூபாய் நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. பணம், பாலிசி, பிரீமியம் மக்களுடையது; ஆனால், பாதுகாப்பு, வசதி, பலன்கள் எல்லாம் அதானிக்கு!
டவுட் தனபாலு: அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணம், பன்மடங்கு பெருகினால் அதன் பலன்கள், பாலிசி கட்டிய மக்களுக்கு தானே வந்து சேரும்... உங்க குற்றச்சாட்டை பார்க்கிறப்ப, மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான்: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பா.ஜ., ஓட்டு சேகரிக்கிறது. 'சிந்துார்' என்பதை பா.ஜ.,வினர் நகைச்சுவையாக மாற்றி விட்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும், குங்குமத்தை அவர்கள் அனுப்பி வருகின்றனர். அதை பிரதமர் மோடி பெயரில் பயன்படுத்துவீர்களா? இது, 'ஒரு நாடு; ஒரு கணவர்' திட்டமா?
டவுட் தனபாலு: குங்குமம் மங்களகரமான பொருள்... அதை, யாரும் யாருக்கும் தரலாம்... அதை இந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேச உங்களால மட்டும்தான் முடியும்... இப்படியே ஏடாகூடமா பேசிட்டு இருந்தா, உங்க தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி சட்டசபை தேர்தல்ல தோற்று வீட்டுல இருக்கிற மாதிரி, நீங்களும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!