PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரான, அ.தி.மு.க.,வை சேர்ந்த விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த அனைத்து திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் முடித்து வைத்துள்ளார். ஆயினும் தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், இலவச ஆடு, மாடுகள் வழங்குதல், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
டவுட் தனபாலு: சரி விடுங்க... உங்க ஆட்சியின் திட்டங்களை அவங்க முடிச்சு வச்சுட்டாங்கல்ல... அதே மாதிரி, இந்த ஆட்சியில தி.மு.க.,வினர் அறிவித்து நிறைவேற்றாத திட்டங்களை எல்லாம், 2026ல் உங்க ஆட்சி வரும்போது முடிச்சு குடுத்துடுங்க... கணக்கு சரியா போயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணி நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டில்லி மாநிலங்களுக்கும், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
டவுட் தனபாலு: இந்தியாவுல கட்சியை வளர்க்கிற அதே நேரத்துல, உலக நாடுகள்லயும் தன் கட்சிக்கொடி பறக்கணும்னு விஜய் விரும்புறாரா அல்லது, தான் ஷூட்டிங் போயிட்டு வந்த நாடுகள்ல சந்திச்ச ரசிகர்களை எல்லாம் கட்சி பொறுப்பாளர்களா போட்டு கவுரவப்படுத்திட்டு இருக்காரா என்ற, 'டவுட்'தான் வருது!
பிரதமர் மோடிக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம்: கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 19.4 சதவீதம்; பா.ஜ., கூட்டணி, 11.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில் பா.ஜ., போட்டியிட வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழக பா.ஜ., தலைவரா இருந்துதான், கூட்டணிக்கு குண்டு வச்சீங்கன்னு, உங்களை நைசா வெளியேத்திட்டு, நயினார் நாகேந்திரனை அந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்க... வெளியில போனாலும், விவகாரமான ஆலோசனைகள் குடுக்கிறதை நிறுத்த மாட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!