PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்: மதுரை முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களின் எழுச்சியை காட்டுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பினர். நாங்கள் மத வழிபாட்டு முறையில் வேறாக இருந்தாலும், எங்கள் முப்பாட்டன் முருகனைத்தான் வணங்கி வருகிறோம். நாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியலில் மைல்கல்லாக இருக்கும்; கடவுள் மறுப்பாளர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கும்.
டவுட் தனபாலு: 'முருக பக்தர்கள் மாநாட்டை சங்கிகள் மாநாடு' என்று விமர்சித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு, இதை விட சிறந்த பதிலடி இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், ஹிந்துக்கள் அதிருப்தியை சரிக்கட்ட ஆளுங்கட்சி தரப்பில் அடுத்து எதையாவது பிரமாண்டமா செய்வாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்: வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., குறித்து இதுவரை நல்ல கருத்துகளையே தெரிவித்துள்ளார். தன்மான உணர்வு உள்ள திருமாவளவன் போன்றோர், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஆனா, 'நீங்க பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருக்கும் வரை, அந்த பக்கம் வர முடியாது'ன்னும் திருமாவளவன் தெரிவிச்சிருக்காரே... பா.ஜ.,வை கழற்றிவிட்டால், திருமா உங்க அணியில் அங்கம் வகிக்க வாய்ப்பிருக்கு... ஆனா, அதை உங்க கட்சி தலைமை செய்யுமா என்பது, 'டவுட்' தான்!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'ஒரு கட்சிக்கு இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் இருந்தாலே அங்கீகாரம் வழங்கலாம்' என்ற விதியை கொண்டு வர நானே காரணம். அதனால் தான் இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஈரோட்டில் ம.தி.மு.க.,வின் கணேசமூர்த்திக்கு மட்டுமே ஒரு சீட் வழங்கப்பட்டது. அப்போது, எனக்கு விருதுநகரில் வாய்ப்பு கோரினோம்; அப்படி தந்திருந்தால், அங்கு நானும் வெற்றி பெற்றிருப்பேன். தேர்தல் கமிஷன் அங்கீகாரமும் பெற்றிருப்போம்.
டவுட் தனபாலு: அப்படி எதுவும் நடந்து, உங்க கட்சிக்கு அங்கீகாரம் கிடைச்சுடக் கூடாதுன்னு தான், உங்களை ராஜ்யசபா எம்.பி.,யாக்கி டில்லிக்கு அனுப்பினாங்களோ... ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி, ம.தி.மு.க.,வை துவங்கிய உங்களை சமயம் பார்த்து பழிவாங்கிட்டாங்களோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?