PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: நான் மாநில கல்லுாரியில் படித்தபோது, மாணவர்கள் கூட்டத்தில் பேசியதை பார்த்து, முன்னாள் முதல்வர் காமராஜர் என்னை காங்கிரசில் சேர அழைத்தார்; ஆனால், நான்தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறி மறுத்து விட்டேன். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், ம.தி.மு.க.,வை துவங்கினேன். அப்போதும் நான், தி.மு.க.,வை எதிர்க்கவில்லை; ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வதாக அறிவித்தேன்.
டவுட் தனபாலு: கடந்த 1994ல், தி.மு.க.,வில் இருந்து நீங்க நீக்கப்பட்டதும், 'தி.மு.க., எங்களுக்கு தான் சொந்தம்... அறிவாலயத்தை கைப்பற்றுவோம்... கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து தி.மு.க.,வை மீட்போம்'னு ஊர் ஊரா போய் பேசினீங்களே... 'அதெல்லாம் என்னை போல வேடம் போட்டு, வேற யாரோ பேசியது'ன்னு சொன்னாலும் சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
********
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க.,வினர் ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழுவர். கூட்டணி கட்சித் தலைவர்கள், தி.மு.க., ஆட்சியை அற்புதமான ஆட்சி என்கின்றனர். 'சீட்'டை குறைத்து விடுவர் என்ற பயத்தில் ஜால்ரா போடுகின்றனர். தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதை இல்லை. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் சேருப வர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.
டவுட் தனபாலு: ரத்தின கம்பளம் என்ன... தங்க தாம்பாளமே கொடுத்து வரவேற்றாலும் யாரும் வர மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டாங்களே... அதனால, 'ஆட்சியில் பங்கு'ன்னு ஒரு அணுகுண்டை வீசுங்க... அடுத்த நொடியே உங்க முகாம், கூட்டணி கட்சிகளால நிரம்பி வழியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
**********
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, 2019ம் ஆண்டில் இருந்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக, 'டாட்டா பை பை' சொல்லி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலிலும், 'பை பை' தான் அவருக்கு பரிசாக கிடைக்கும். இனி மக்கள் ஒருபோதும், பழனிசாமியை நம்ப மாட்டார்கள். ஏன், அவருடைய கட்சிக்காரர்களே அவரை நம்ப தயாரில்லை.
டவுட் தனபாலு: பழனிசாமியை யார் நம்புறாங்களோ, இல்லையோ தெரியாது... பலமான கூட்டணி இருந்தாலும், தேர்தல் வெற்றியில் உங்களுக்கு, 'டவுட்' வந்துட்டது நல்லாவே தெரியுது... அதனால தான், ஐ.ஏ.எஸ்., செய்தி தொடர்பாளர்கள், 'ஓரணியில் தமிழகம்; உங்களுடன் ஸ்டாலின்'னு புதுசு புதுசா யோசிக்கிறீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

