PUBLISHED ON : ஜூலை 25, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்; அப்படித்தான் அமைய வேண்டும். அதுதான் எங்கள் விருப்பம். விரைவில் என் கட்சி தலைமையில் பலமான கூட்டணி ஏற்படுத்தப்படும்; விரைவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், சட்டசபை தேர்தல் கூட்டணி நிலை குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.
டவுட் தனபாலு: உங்க கட்சி தலைமையில் கூட்டணி அமைக்க போறீங்களா... அ.தி.மு.க., - தி.மு.க., அணியில் இடம் கிடைக்காத உதிரி கட்சிகளை எல்லாம் தொடுத்து மாலையாக்க போறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது... ஆனாலும், அந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் வெற்றி மாலை சூடுவாங்களா என்பது, அதை விட பெரிய, 'டவுட்!'
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஈசல்திட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்து போன மணியன் என்பவர் உடலை, கரடுமுரடான மலைப்பகுதியில், தொட்டில் கட்டி துாக்கி சென்ற வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், போராடியும், இரு ஆண்டுகளுக்கு முன், 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஆனால், இன்னும் சாலை அமைக்கவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்கு சான்று!
டவுட் தனபாலு: சாலை அமைக்கவில்லை என்பது இருக்கட்டும்... அதற்காக ஒதுக்கிய, 59 லட்சம் ரூபாய் எங்கு போச்சுன்னு தெரியுமா... அரசுக்கே திருப்பி அனுப்பிட்டாங்களா அல்லது போடாத சாலையை போட்டதா சொல்லி, இடையில யாராவது தின்று, 'ஏப்பம்' விட்டுட்டாங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை எப்படி அழைக்க வேண்டும் என்பதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. 'மக்கள் தொண்டர், மக்கள் தளபதி, எழுச்சி தளபதி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என, பல அடைமொழிகளை எழுதி, அவரிடம் கொடுத்துள்ளனர். இதில், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' அடைமொழியை விஜய் தேர்வு செய்துள்ளார்.
டவுட் தனபாலு: சென்னை பனையூர் கட்சி ஆபீசில் நாலு சுவருக்குள் அமர்ந்து கொண்டு, அவரே, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்னு முடிவு பண்ணிக்கிட்டாரா... தமிழகம் முழுக்க சுற்றி வந்து, மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தால், மக்களே வெகுமதியா விஜய்க்கு ஒரு பட்டத்தை தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!