
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: ஆணவ படுகொலை என்பது தமிழகத் திற்கு தலைகுனிவு. அதை எதிர்த்து, தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். நெல்லை கவின் கொலை போன்று, ஆணவ படுகொலை இனிமேல் நடக்காமல் இருக்க, காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகள் யாரையும் விட்டுவிடக் கூடாது. இப்படுகொலைக்கு எதிராக சட்டசபையை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: 'ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்றா விட்டால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது குறித்து யோசிக்க வேண்டியிருக்கும்'னு துணிந்து சொல்ல மாட்டேங்கிறீங்களே... இதுபோன்ற சம்பவங்களால் ஆளுங்கட்சி மீதான மக்களின் கோபம், அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் உங்களையும் பாதிக்கும் என்ப தில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசுகிறார். பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், அருண் ஜெட்லி குறித்து அவர் பேசியது கண்டனத்திற் குரியது. செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக, 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து பேசி, வீரர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்துகிறார்.
டவுட் தனபாலு: பொதுவாக, மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமில்லை என்று சொல்லுவாங்க... அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு காலமான மத்திய அமைச்சர்களை பத்தி, ராகுல் இப்ப விமர்சிப்பதை, அவரது கட்சியின் மூத்த தலைவர்களே ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்'தான்!
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் பிரசார பயணத்தில், 'இந்திய கம்யூ., கட்சியை காணவில்லை; முகவரியை தேடிக் கொண்டிருக்கிறது' என பேசியுள்ளார். பழனிசாமி வசிக்கும் சேலத்தில், வரும் 18ம் தேதி எங்கள் கட்சியின் பேரணி நடக்க உள்ளது. தன் சுற்றுப்பயணத்தை அன்றைய தினம் ஒத்தி வைத்துவிட்டு, எங்கள் பேரணியை பார்க்க பழனிசாமி வரவேண்டும். அதன் பிறகாவது எங்கள் கட்சி எப்படிப் பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க பேரணியை பார்வையிட பழனிசாமி வந்தார் என்றால், நீங்க அவரது கூட்டணிக்கு போக போறீங் கன்னு செய்திகள் பரவிடாதா... ஒருவேளை அப்படி தகவல் பரவினால் தான், தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்க முடியும்னு, கணக்கு போடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!