
தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை போல, அதே கண்கள், அதே காது, அதே மூக்கு எல்லாம் தே.மு.தி.க.,வினருக்கும் உள்ளது. ஆனால், அக்கட்சிகளிடம் பணம் இருக்கிறது. பணம் இருந்திருந்தால், தே.மு.தி.க.,வும் ஆட்சியை பிடித்திருக்கும். நாங்கள் சேரும் கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, 25 சீட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
டவுட் தனபாலு: இதன் மூலமா, 'வாக்காளர்களுக்கு பணத்தை வாரியிறைத்து தான், தமிழகத்தில் ரெண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை பிடிக்குது'ன்னு சொல்றீங்களா என்ற, 'டவுட்' வருதே... அதே நேரம், இப்படி ரெண்டு கட்சிகளையும் குற்றம் சாட்டிட்டு, கூட்டணியில், 25 சீட்கள் கிடைக்கும்னு எந்த நம்பிக்கையில் சொல்றீங்க என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: உடுமலை அருகே சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்று இனி ஒரு உயிர் போகக்கூடாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அளவில் போலீசார் ரோந்து செல்கின்றனர். கஞ்சா, குடி போதையில் வருவோர் என்ன செய்கிறோம் என தெரியாத அளவுக்கு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு காரணமான மது, போதை பழக்கங் களை இரும்புக் கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: உடுமலை அருகே எஸ்.ஐ.,யை வெட்டி கொன்ற சம்பவமும், மது போதையில் நடந்தது தான்... உரிமைகளை கேட்டு போராடும் ஆசிரியர்கள், டாக்டர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் அரசுக்கு, மது, போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க முடியாதா... பூரண மதுவிலக்கை அமல்படுத்த விடாம அரசின் கைகளை கட்டி போடும் சக்தி எது என்ற, 'டவுட்'தான் வருது!
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன்: தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரிக்கின்றன. அவற்றை சட்ட ரீதியாக தடுப்பதற்கு, தனி சட்டம் இயற்ற முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்; பரிசீலிப் பதாக முதல்வரும் தெரிவித்துள்ளார். சிறப்பு சட்டம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறோம்.
டவுட் தனபாலு: இப்படித்தான், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை தடுக்க தனி சட்டம் கொண்டு வந்தாங்க... ஆனா, இன்னைக்கும் அந்த விளையாட்டை தடுக்க முடியாம, அதுல பலரும் பணத்தை இழந்து தற்கொலை பண்ணிட்டு இருக்காங்க... அதனால, தனி மனிதர்கள் திருந்தாத வரை, எந்த சிறப்பு சட்டம் இயற்றினாலும் ஆணவ கொலைகள் குறையுமா என்பது, 'டவுட்'தான்!