PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: தேசம், கல்வி, வேலைவாய்ப்பு, நாட்டின் கட்டமைப்பு பற்றி சிந்திக்காமல், தொழில்நுட்பம் மூலம் நம் சிந்தனையை மழுங்கடித்து விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாக, ரஜினி படம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போய் விட்டது. இப்படியொரு சமூக சூழலை ஏற்படுத்தி, அனைவரையும் அதை நோக்கியே சிந்திக்க வைத்துள்ளனர். ஓட்டு போட, 500 ரூபாய் கேட்கும் மக்கள், 2,000 ரூபாய் கொடுத்து, ரஜினி படம் பார்க்க செல்கின்றனர்.
டவுட் தனபாலு: ரஜினி படம் என்பது, பல 100 கோடி ரூபாய்களை முதலீடு செய்து நடக்கிற ஒரு வியாபாரம்... போட்ட முதலீட்டை லாபத்தோட எடுக்கிறதுக்காக, அதை பல வழிகள்லயும் விளம்பரப்படுத்தவே செய்வாங்க... மக்கள் தான் பகுத்தறிவுடன் சிந்தித்து, '2,000 ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்க்கணுமா, வேண்டாமா' என்று முடிவு செய்யணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்: இந்தியாவில் பாசிசத்தால் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் ஆதி திராவிடர்கள் உள்ளனர்.
டவுட் தனபாலு: ஆனா, இதே மாவட்டத்தில் உள்ள வேங்கைவயலில் தான், ஆதிதிராவிடர்கள் குடிக்கும் நீரில் மனித கழிவுகளை கலந்தவங்களை, ரெண்டு வருஷமாகியும் உங்களால கண்டுபிடிக்க முடியலை... இதனால, அந்த சமூகத்தினர் ஓட்டுகள் வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்குமா என்பது, 'டவுட்'தான்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மக்கள் சேவையுடன் கூடிய அரசியல் செய்ய வேண்டும் என்றால், நடிகர் விஜய் பனையூரில் இருந்து வெளியே வர வேண்டும்; மக்களை சந்தித்து, அரசியல் செய்ய வேண்டும். இதை செய்ய வில்லை என்றால், வரும் சட்டசபை தேர்தலிலேயே அவர் காணாமல் போய் விடுவார். எல்லாரும் எம்.ஜி.ஆராக முடியாது. தமிழகத்திற்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.,தான் இருக்க முடியும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது சரிதான்... உலகத்தில் ஒரே ஒரு சூரியன்; ஒரே ஒரு சந்திரன் தான் என்பது போல, எம்.ஜி.ஆர்., என்பது ஒருத்தர் தான்... அவரை போல ஆக நினைத்து, புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனையாக மாறிய நடிகர்களின் கதியை, விஜய் யோசித்து பார்க்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!