PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: கோஷ்டி பூசலால் தான், நம் கட்சிக்கு ஓட்டு வங்கி குறைந்து கொண்டே வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்றால், அ.தி.மு.க., நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து, பூத் கமிட்டிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்று தருபவர்களுக்கு, தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
டவுட் தனபாலு: சட்டசபை தேர்தலில் அதி க ஓட்டுகளை வாங்கி தரும் நிர்வாகிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப் படும்னு அறிவிச்சிருக்கீங்களே... நிர்வாகிகளுக்கே தங்க நாணயம் தரும் நீங்க, உங்க கட்சிக்கு ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு என்னென்ன பரிசுகள் தருவீங்க என்ற, 'டவுட்' இப்பவே எழுதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அமைச்சர்கள் பலர், அ.தி.மு.க., வில் இருந்து போனவர்கள். அதாவது, 'டெபுடேஷன்' எனப்படும் அயல் பணியில் அங்கே சென்றுள்ளனர். அமைச்சர் பதவிக்கு தி.மு.க.,வில் ஆட்களே இல்லை. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர்களில், எட்டு பேர் அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவர்கள். தி.மு.க.,வில் காலம் காலமாக உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்படுகின்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து போனவர்கள், நல்ல துறைகளை வாங்கி செழிப்பாக இருக்கின்றனர்.
டவுட் தனபாலு: பொதுவாக, டெபுடேஷனில் போறவங்க, மறுபடியும் அவங்களது பழைய இடத்துக்கே திரும்பி வந்துடு வாங்க... அந்த வகையில், உங்களிடம் இருந்து போன அந்த எட்டு அமைச்சர்களும், மறுபடியும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துட்டா, உங்க பக்கமே திரும்பி வந்துடுவாங்கன்னு எதிர்பார்க்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுமே ஆட்சிக்கு வரும் போது, தாங்கள் பிரசாரம் செய்த கொள்கைகளில் இருந்து விலகி சென்று, அவற்றை மறந்து விடுகின்றன. ஆட்சி, அதிகாரத்துக்கு எதிரான எங்கள் பிரசாரத்துக்கும், தேர்தல் கூட்டணிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
டவுட் தனபாலு: போகும் இடங்களில் எல்லாம், ரெண்டு கட்சிகளையும் விமர்சனம் பண்ணிட்டே இருக்கீங்களே... தேர்தல் நேரத்தில், 'புதிய தமிழகம் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'ன்னு ரெண்டு திராவிட கட்சிகளும் முடிவு பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' வருதே!