PUBLISHED ON : பிப் 27, 2026 04:08 AM

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேட்டி:
'வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம், 2,000 ரூபாயும், பிளஸ் 2
படித்தோருக்கு மாதம், 1,000 ரூபாயும் வழங்கப்படும்' என, எங்கள் கட்சியின்
பொதுச்செயலர் பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், 'ஒவ்வொரு
குடும்பத்துக்கும், 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' எனவும்
அறிவித்துள்ளார். இது, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளை எல்லாம் செயல்படுத்த நிதிக்கு எங்க போவீங்க என்று
கேட்டால், இவங்களிடம் பதில் இல்லையே!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேட்டி: சென்னையில், புறநகர் மின் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் தினமும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ரயில்வே, மத்திய அரசின் பொறுப்பில் உள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை.
'ரயில் பயணியரின் அதிருப்தி, தேர்தலில் பா.ஜ., பக்கம் திரும்பணும்' என, தி.மு.க., எதிர்பார்ப்பது நல்லாவே தெரியுது! தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: 'துரோகத்துக்கான நோபல் பரிசை பழனிசாமிக்கு கொடுக்கணும். அவரை ஏத்துக்குறதுக்கு பதிலா, துாக்குல தொங்கலாம்' என, உக்கிரத்தை கக்கியவர் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன். தற்போது, 'நானும், பழனிசாமியும் பங்காளிகள்' என, பல்டி அடித்ததும் அவர்தான். தான் முரண்பட்ட முடிவுகளை எடுக்கலாம். ஆனால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்பதாக இருக்கிறது, தினகரன் தீர்ப்பு.
'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என்பது, அரசியலுக்கும் பொருந்தும்!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: தி.மு.க.,வின், 2021 தேர்தல் அறிக்கையில், 'ஆண்டுக்கு, 10 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் மூலம் வேலை வாய்ப்பு வழங்கி, ஐந்தாண்டுகளில், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம்' என, கூறியிருந்தனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, 'தி.மு.க., இளைஞர் அணியில் 50 லட்சம் பேரை சேர்த்துள்ளோம்' என, தம்பட்டம் அடித்துள்ளார். ஒருவேளை, 50 லட்சம் பேரை இளைஞர் அணியில் சேர்ப்பதை தான் வேலை வாய்ப்பு என்று கூறினரோ?
'தி.மு.க.,வில் பகுதி செயலர் என்றால், தாசில்தாருக்கு நிகர்; மாவட்ட செயலர் என்றால், கலெக்டருக்கு நிகர்'னு அந்த கட்சியினர் பெருமை பேசுவாங்க... அந்த வகையில், இளைஞர் அணியில் சேர்ந்த, 50 லட்சம் பேரும் அரசு ஊழியர்கள் தான்!

