PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'ஓரணியில் தமிழகம்' வாயிலாக, 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். இதனால், பதற்றத்தில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எங்கு சென்றாலும், ஓரணியில் தமிழகம் பற்றி தான் விமர்சிக்கிறார். அ.தி.மு.க., - பா.,ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மீண்டும் ஹிந்தி புகுத்தப்படும்; தொகுதி மறுவரையறை வரும்; புதிய கல்வி கொள்கை வரும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே பழனிசாமி முதல்வரா இருந்தப்ப, பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., நாலு வருஷம் இருந்துச்சே... அப்ப, நீங்க சொன்ன இந்த விஷயங்கள் எதுவும் நடக்கலையே... நீங்க இப்படி பிரசாரம் பண்றதால, இந்த திட்டங்கள் எல்லாம் வேணும்னு நினைக்கிற நடுநிலை வாக்காளர்கள், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக திரும்பிட்டா, உங்க பாடு திண்டாட்டமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலராக, மூன்று முறை தொடர்ந்து முத்தரசன் பதவியில் இருந்து விட்டார். இதனால், சேலத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில், புதிய மாநில செயலரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டது. இதன் பின்னணியில் முத்தரசன் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 10 வருஷத்துக்கும் மேலா பதவியில் இருக்கும் முத்தரசன், அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்துடுவாரா... சட்டசபை தேர்தல் வேற வருது... தேர்தல் செலவுக்கு தி.மு.க., தரும் பல கோடி ரூபாயை கையாள வேண்டியிருக்கு... அதனால, தேர்தல் முடியும் வரை முத்தரசனை அசைக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழக அரசின், 'நமக்கு நாமே திட்டம்' மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் திட்டங்கள், ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகின்றன. தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்திற்கு, அக்கட்சியே மூடுவிழா நடத்துகிறது என்றால், மற்ற திட்டங்களை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
டவுட் தனபாலு: அது மட்டுமா... முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் துவங்கிய, 'அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை' திட்டத்தை எல்லாம் இந்த ஆட்சியில் செயல்படுத்திய மாதிரியே தெரியலையே... புதுசு புதுசா திட்டங்களை துவங்கி, அதுக்கு ஸ்டாலின் பெயர் சூட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, பழைய திட்டங்களில் காட்டுவது இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!