PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை, வி.ஏ.ஓ., ஒருவர் தடுத்துள்ளார். இதனால், அவரை வீடு புகுந்து, சமூக விரோதிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இன்று, தமிழகத்தில் ஒரு நேர்மையான அதிகாரிக்கு கிடைக்கும் வெகுமதி இதுதான். தி.மு.க., ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பில்லை.
டவுட் தனபாலு: மணல் கடத்தல் கும்பல் தரும், 'வெகுமதி'யை வாங்கிட்டு, கமுக்கமா இருந்திருந்தால், வி.ஏ.ஓ.,வுக்கு இந்த அவலம் நடந்திருக்குமா... இதை எல்லாம் பார்த்துட்டு, கொஞ்ச நஞ்ச நேர்மையுடன் இருக்கும் அதிகாரிகளும், ஆளும் தரப்புக்கு, 'ஆமாம் சாமி' போட பழகிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு, 10,000 கோடி ரூபாய் செலவாகும். எனவே, அவசியம் இல்லாத செலவுகளை குறைத்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை மேற் கொள்ளுமாறு நிதித் துறையை அரசு அறிவுறுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயிப்பதற்கு, அரசின் நிதியை இப்படி வாரியிறைப்பது எந்த வகையிலும் நியாயமே இல்லை... எத்தனையோ நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருந்தும், இதை அரசுக்கு சுட்டிக்காட்டாம வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன் என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, ௩௦ நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டாலே, மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என, எதிர்க்கட்சியினர் புலம்புகின்றனர். இந்த சட்டம், எல்லாருக்கும் பொதுவானது. மக்கள் பிரதிநிதிகள் யார் குற்றம் செய்திருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
டவுட் தனபாலு: இன்று, நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சிதான் நடக்குது... இந்த சட்டம் அவங்களுக்கும் பொருந்துமே... இந்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள், இந்த எளிய உண்மையை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க என்ற, 'டவுட்' வருதே!