PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு: தமிழகத்தில், பொறுப்பு டி.ஜி.பி., உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடக்கிறது. உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் வகையில் தான், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசில் தான் அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதும் நடக்கிறது.
டவுட் தனபாலு: சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற மறுநாளே, அவருக்காகவே ஒரு பதவியை உருவாக்கி, அதுல அமர்த்துறீங்களே... இதே மாதிரி, எல்லா டி.ஜி.பி.,க்களும் ஓய்வு பெற்றதும், புதிய பதவி வழங்கினீங்களா... இதுல இருந்தே நீங்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது எப்படி என்பது, 'டவுட்' இல்லாம தெரியுதே!
*********
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், அ.ம.மு.க., தொடர்ச்சியாக தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அக்கூட்டணியில் இருந்து விலகுகிறோம். அடுத்து என்ன முடிவெடுக்க போகிறோம் என்பதை வரும் டிசம்பரில் அறிவிப்போம். யாரோடு கூட்டணி என்பது குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
டவுட் தனபாலு: போற போக்கை பார்த்தால், நீங்க, பன்னீர்செல்வம், சசிகலா எல்லாரும் சேர்ந்து, தனி அணியா தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க போறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது... ஒருவேளை அப்படி தனி அணியா களம் இறங்கினால், எதிர்ப்பு ஓட்டுகள் எல்லாம் பிரிந்து, ஆளும் கட்சியான தி.மு.க.,வின் வெற்றி இன்னும் எளிதாகிடும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
*********
பத்திரிகை செய்தி: திருச்சியில், பிப்ரவரி, 7ம் தேதி நடக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டிற்கு, 'ஓயாத அலைகள்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிலேயே, 234 வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: சி.பா.ஆதித்தனார் நடத்திய நாம் தமிழர் கட்சி என்ற பெயரையே உங்க கட்சிக்கு வச்சிருக்கீங்க... இலங்கையில் ராணுவத்தை எதிர்த்து, 1996 முதல் 2000வது ஆண்டு வரை நடத்திய போருக்கு விடுதலை புலிகள் சூட்டிய, 'ஓயாத அலைகள்' என்ற பெயரையே உங்க மாநாட்டுக்கும் வச்சிருக்கீங்க... உங்களுக்கு சொந்தமாகவே யோசிக்க தெரியாதோ என்ற, 'டவுட்'தான் வருது!
*********