PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன்: 'அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். கட்சியின் பொதுச்செயலராக இருப்பவர் பழனிசாமி. அவர் எடுக்கும் முடிவுதான், கட்சியில் இறுதியானது. அவர், என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். அவர் எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு கட்சியில் அனைவரும் கட்டுப்படுவோம்.
டவுட் தனபாலு: அது சரி... கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நீங்க, கட்சி வளர்ச்சிக்கு எது நல்லதோ, அதை பழனிசாமியிடம் வலியுறுத்தி வாதாட வேண்டாமா... அதை விட்டுட்டு, 'அவர் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுவோம்'னு ஜெ., காலத்து மனநிலையிலேயே இருந்தால், தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே தான் இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் சிதம்பரம்: 'தமிழகம், கேரளாவில் ஓட்டு திருட்டு நடத்த முடியாது' என, டில்லி தலைமையிடம் உறுதி அளித்துள்ளேன். ஏனெனில், கேரளாவில் இடதுசாரி அணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற வலிமையான கூட்டணிகள் உள்ளன. அதேபோல், தமிழகத்திலும் ஓட்டு திருட்டு நடத்த முடியாது. இங்கு ஒரு கிராமத்தில், வெளிநபர் ஒருவர் நுழைந் தாலோ, வாக்காளர் பட்டியலில் புதிதாக ஒருவர் இடம் பெற்றாலோ, அங்கு உள்ளவர்கள் கேள்வி எழுப்புவர்.
டவுட் தனபாலு: 'பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களின் வாக்காளர்கள் எல்லாம் அப்பாவிகள்... அவங்களை சுலபமா ஏமாத்திடலாம்... தமிழக வாக் காளர்கள் எல்லாம் புத்திசாலிகள்... அவங்களை போலி வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றலாமே தவிர, ஓட்டுகளை திருடும் அளவுக்கு ஏமாத்த முடியாது'ன்னு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: 'அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னைகளை, அவர்கள் தான் பேசி தீர்க்க வேண்டும்' என, கூட்டணியை முடிவு செய்த அன்றே, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக சொல்லி விட்டார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மூழ்கக் கூடிய கப்பல் இல்லை; 2026ல் தமிழகத்தில் பறக்கக்கூடிய ஜெட் விமானம்.
- டவுட் தனபாலு: பக்கத்து வீட்டுல பற்றிய தீயை, அவங்களே அணைப்பாங்கன்னு உட்கார்ந்துட்டு இருந்தா, அது உங்க வீட்டையும் சேர்த்துதானே பாதிக்கும்... அந்த மாதிரி, அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரம், அவங்களுடன் கூட்டணியில் இருக்கும் உங்க கட்சியின் வெற்றிக்கும் வேட்டு வச்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!