PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்புக்கான கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அது குறித்து, கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு தான் உள்ளனர். அவர்கள் யார் என்பது, 'சஸ்பென்ஸ்' ஆக இருக்கட்டும். ஆனால், இதுவரை ஒருங்கிணைப்பு குறித்து நான் சொன்ன கருத்துகளுக்கு, எதிர் கருத்துகளை யாரும் கூறவில்லை.
டவுட் தனபாலு: உங்க கருத்துக்கு ஆதரவாக, கட்சிக்கு வெளியில் இருக்கும் பன்னீர்செல்வம், தினகரன் போன்றவங்க தான் இருக்காங்க... அ.தி.மு.க.,வில் இருந்து யாரும் உங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கலையே... அப்படி குரல் கொடுத்தால், உங்க பதவிகளை பழனிசாமி பறித்த மாதிரி, அவங்க பதவிகளும் பறிபோயிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி: கடந்த, 60 ஆண்டு காலமாக, காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமாக ஒரு சூழல் நிலவுகிறது. அந்த நிலையை மாற்றி, வெற்றி பெறும் அரசில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்கும் நிலைக்கு வருவோம். கூடுதல் தொகுதி தாருங்கள் என கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. 'பசிக்கிறது, இன்னும் கொஞ்சம் சோறு போடுங்கள்' என, தாயிடம் குழந்தை கேட்பதை போல் தான் இதுவும்.
டவுட் தனபாலு: அது சரி... எந்த தாயும், தன் குழந்தை வாய் விட்டு கேட்கிற வரைக்கும் சோறு போடாம இருக்க மாட்டாங்களே... தி.மு.க.,வை நீங்க தாயா நினைக்குறீங்க... ஆனா, அவங்க உங்களை மாற்றாந்தாய் பிள்ளையா தான் மதிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பெரம்பலுார் மாவட்ட காங்., தலைவர் சுரேஷ்: காங்கிரஸ் இல்லாமல், எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகம் முழுதும் காங்கிரசை நம்பி தான் மக்கள் ஓட்டு போடுகின்றனர். ஆட்சி, அதிகாரத்திற்கு காங்கிரஸ் வந்தால் தான் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., தோல்வியை தழுவும்.
டவுட் தனபாலு: 'காங்கிரசால் தான் தி.மு.க., ஆட்சியில் இருக்கு'ன்னு நீங்க சொல்றீங்க... அவங்களோ, 'எங்க தயவில் தான் காங்., சார்பில் சில எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்குள்ள நுழைய முடியுது'ன்னு சொல்றாங்க... ரெண்டு கைகளும் சேர்ந்தால் தான் ஓசை என்பதை தி.மு.க., தலைமை புரிஞ்சுக்குமா என்பது, 'டவுட்'தான்!