PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: அரசியல் காமெடி ஒன்று சொல்கிறேன்... தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாக த.மா.கா., தலைவர் வாசன் சொல்லி இருக்கிறாராம். சிங்கிள் ரூமுக்குள் அடங்கும் கட்சியை வைத்துக் கொண்டு பேசுபவர்களுக்கெல்லாம், என்ன பதில் சொல்ல முடியும்?
டவுட் தனபாலு: தே.ஜ., கூட்டணியில் இருப்பதால், தி.மு.க., அரசுக்கு எதிராக வாசன் குரல் கொடுக்கிறார், அவ்வளவு தான்... உங்க அரசை கண்டிச்சு போராட்டம் நடத்தும் அளவுக்கு கூட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை தான்... அதுக்காக, உங்களது நெருங்கிய நண்பர் மூப்பனாரின் மகனை இப்படி கலாய்க்கலாமா என்ற, 'டவுட்' வருதே!
lll
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல்வர் பதவியில் இருந்து, மக்கள் வரிப்பணத்தை புசித்தவர். ருசி கண்ட பூனை போல, எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற பதவி வெறியில், 'கரூரில் நடந்த மரண சம்பவத்துக்கு ஆட்சியாளர்களும், ஆளும்கட்சியும் தான் காரணம்; இது சதி' என, த.வெ.க.,வின் வக்கீல் போல பேசி வருகிறார். தான் சார்ந்துள்ள கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என பழனிசாமி நினைக்கலாம்.
டவுட் தனபாலு: 'விஜய் கூட்டணி வேண்டும்'னு பழனிசாமி மட்டுமா நினைக்கிறார்... ஒருபக்கம் காங்கிரசும், மறுபக்கம் பா.ஜ.,வும் அவரை கூட்டணியில் சேர்த்துக்க ஆசைப்படுதே... கரூர் துயரம், விஜய் கட்சியை தேசிய அளவில் கொண்டு போயிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: வேங்கைவயலில் எஸ்.சி., மக்கள் வசித்த பகுதியில் குடிநீரில் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் நேரில் சென்றாரா? ஆளும் தி.மு.க., அரசுக்கு சொம்பு அடிக்கிறது தவிர, திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை. பட்டியல் சமூக மக்களுக்கு அவர் என்ன செய்திருக்கிறார். விழுப்புரம், சிதம்பரம் லோ க்சபா தொகுதிகளில், 'சீட்' வாங்கவே அவர் கட்சி நடத்துகிறார்.
டவுட் தனபாலு: 'கரூர் சம்பவத்தில் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜய் மீது மட்டும் வழக்கு போடாதது ஏன்' என்று, முதல்வர் வசம் உள்ள போலீஸ் துறை மீதே திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்காரே... 'அது கூட, தேர்தலில் கூடுதல் சீட்கள் வாங்கும் தந்திரம் தான்'னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
lll