PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உள்ளூர் நிலைமையே ஊசலாடும்போது, உலக அரசியல் உங்களுக்கு தேவை தானா? 'பாலஸ்தீனத்துக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்' என பேசும் உங்களால், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் கழிவு கலந்தது போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு மக்களை காவு கொடுத்த ஸ்டாலின், காசாவுக்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.
டவுட் தனபாலு: காசாவில் நடக்கிற போருக்கு இங்க ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாலோ மட்டும் உடனே தீர்வு கிடைச்சிடுமா என்ன...? காசா பிரச்னையை வைத்து, உள்ளூரில் அரசியல் பண்றாங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll
அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பயணம் செய்த கார், ஒரு ஸ்கூட்டரில் இடித்துள்ளது. ஒரு தலைவராக, ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரின் நலனை திருமாவளவன் உறுதி செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தன்மையான குணம் படைத்த திருமாவளவன், அப்படி செய்திருப்பார். ஆனால், இப்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், குண்டர்களை ஏவி விட்டுள்ளார். தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், அவர்களின் மரபணு இவர்களுக்கும் ஒட்டிக் கொண்டதா?
டவுட் தனபாலு: அதெல்லாம் இல்லை... ஆளும் கட்சி கூட்டணியில் இருப்பதால், யார், என்ன புகார் கொடுத்தாலும், கூட்டணி கட்சியினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க என்ற துணிச்சல் தான், இதுபோன்ற அடாவடிகளுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக காங்., துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., துணை தலைவர் சுரேந்திரனை, தி.மு.க.,வில், அக்கட்சியின் எம்.எல்.ஏ., சீனிவாசன் இணைத்துள்ளார். சுரேந்திரனிடம், 'அங்கு இருந்தால் என்ன; இங்கு இருந்தால் என்ன; காங்கிரசிலேயே இருங்கள்' என, புத்திமதி சொல்லி, அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், காங்கிரஸ் கட்சியை பலவீனம் அடைய செய்ய நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
டவுட் தனபாலு: என்னமோ, தமிழகத்துல காங்., அசுர பலத்துடன் இருப்பது போலவும், சுரேந்திரனை இழுத்துட்டதால், பலம் குறைஞ்சிட்டது மாதிரியும் பேசுறாரே... தி.மு.க.,வின் கிளை கழகம் மாதிரியே காங்., ஆகிட்டதால, 'சுரேந்திரன் அங்க இருந்தால் என்ன, இங்க இருந்தால் என்ன'ன்னு சீனிவாசன் நினைச்சுட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll