PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் தான், அ.தி.மு.க., அலுவலகம் எனும் அளவுக்கு, பா.ஜ.,விடம் அக்கட்சியை அடகு வைத்து விட்டனர். அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் என, பல அணிகள் உள்ளன. சொந்த கட்சி பிரச்னைக்கு, அடுத்த கட்சியிடம் பஞ்சாயத்து பேசும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., தான்.
டவுட் தனபாலு: உங்க கட்சியிலும் கூட, சீனியர்கள் பலரும் உங்க தந்தையின் ஆதரவாளர்களா இருக்காங்க... ஆயினும், உங்களுக்கு என்று, 'சின்னவர் அணி'ன்னு ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கிட்டு இருக்கீங்களே... இதை பற்றி எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தால் ஏத்துக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார கூட்டத்தில், சிலர் த.வெ.க., கொடிகளுடன் நின்றிருந்தனர். அதை கண்டதும் உற்சாகம் அடைந்த பழனிசாமி, 'அங்கே பாருங்கள், கொடி பறக்குது; பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். குமாரபாளையம் கூட்டத்தின் எழுச்சி ஆரவாரம், முதல்வர் ஸ்டாலின் செவிகளை கிழிக்கும்' என பேசினார்.
டவுட் தனபாலு: 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற 'பார்முலா'வில் அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் நெருங்கி வருவது நல்லாவே தெரியுது... இந்த பிள்ளையார் சுழி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் தலைவிதியை மாற்றி எழுதுவதற்கான துவக்கம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: சாலைகளுக்கு ஜாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய புரட்டு வேலையை, தி.மு.க., அரசு துவங்கி இருக்கிறது. தி.மு.க., அரசு வெளியிட்ட மாற்று பெயர்கள் பட்டியலில், தமிழை வளர்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்திய நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர் இல்லை. ஜாதி பெயர் நீக்கம் என்ற பெயரில், பார்க்கும் இடமெல்லாம், தன் தந்தை கருணாநிதி பெயர் இருக்க வேண்டும் என கனவு காண் கிறார் முதல்வர் ஸ்டாலின்.
டவுட் தனபாலு: எல்லா தரப்பு மக்களும் புழங்கும் பொதுவான இடங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதை, யாராலும் ஏத்துக்கவே முடியாது... மாநிலம் முழுக்க இருக்கும் தி.மு.க., அலுவலகங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டினால், யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!