PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி: சாமானியர்களை மதித்து, அவர்களுக்கு அரசியல் அரங்கில் பதவிகள், பொறுப்புகள் வழங்குவதுடன், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே கட்சி, தி.மு.க., தான். அதை யாரும் மறுக்க முடியாது. தமிழக வரலாற்றில், தி.மு.க.,வுக்கு சமமாக, எந்த கட்சியும் வர முடியாது.
டவுட் தனபாலு: 'சாமானியர்களுக்கு பதவிகள் வாங்கி தரும் கட்சி, தி.மு.க., தான்'னு சொல்றீங்களே... இப்ப, அமைச்சராக இருக்கும் நீங்க, கட்சிக்கு பல வருஷங்களா உழைச்சிருக்கீங்க... கட்சியின் மூத்த தலைவரான உங்களால, தி.மு.க.,வின் தலைவர் பதவியையோ அல்லது முதல்வர் பதவியையோ அலங்கரிக்க முடியுமா என்ற, 'டவுட்'டுக்கு உங்களிடம் பதில் இருக்கா?
தமிழக சட்டசபை, காங்., குழு தலைவர் ராஜேஷ்குமார்: ஒவ்வொரு மாநில வாக்காளர் பட்டியலிலும் முறைகேடுகள் செய்து, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் துணை புரிந்துள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். அகில இந்திய, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாயிலாக, வரும், 15ம் தேதி, அந்த கையெழுத்து மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்க உள்ளோம். தலைமை தேர்தல் கமிஷனரை பதவிநீக்கம் செய்யும் வகையில், எங்களின் கையெழுத்து இயக்கம் அமையும்.
டவுட் தனபாலு: இப்படி தான், 'நீட்' தேர்வை நீக்கக்கோரி, தி.மு.க., சார்பில், 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தினாங்க... அதனால், நீட் தேர்வில் விலக்கு கிடைச்சிடுச்சா... அந்த வகையில், நீங்க நடத்தும் கையெழுத்து இயக்கமும், விளம்பரத்துக்கு தான் பயன்படுமே தவிர, பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யின் முன்னாள் ஆளும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி: உத்தர பிரதேசத்தில், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். பா.ஜ., - காங்., கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். தேர்தலில் கூட்டணி வைக்கும் போதெல்லாம், எங்கள் ஓட்டு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
டவுட் தனபாலு: தாராளமா தனித்து போட்டியிடுங்க... அப்ப தான், உங்க கட்சியின் சொந்த பலம், உலகத்துக்கு தெரிய வரும்... அதன் பின் தான், உங்க தலைமையில் கூட்டணி அமைக்க, பல கட்சிகளும் ஓடோடி வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!