PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, தமிழகத்தை சேர்ந்தவர்; மதுரை மண்ணின் மைந்தர். உலகளாவிய அளவில், தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அவரை அணுகி முறைப்படி அழைப்பு கொடுத்திருந்தால், ஆந்திராவில், 1.32 லட்சம் கோடி ரூபாயில் அமைய உள்ள, ஏ.ஐ., மையம் தமிழகத்திற்கு வந்திருக்கும். அந்த வாய்ப்பை தி.மு.க., அரசு கோட்டை விட்டுள்ளது. அந்த மையம் செயல்படத் துவங்கினால், ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அந்த வாய்ப்பை, தமிழகம் பறிகொடுத்திருக்கிறது.
டவுட் தனபாலு: சுந்தர் பிச்சை, தமிழகத்தை சேர்ந்தவரா இருப்பதால் தான், நம்ம ஊரை தேர்வு செய்யலை... ஏன்னா, இங்க இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை பற்றி, மற்ற எல்லாரையும் விட, அவருக்கு நல்லாவே தெரியும் என்பதால் தான், தமிழகத்தை சுந்தர் பிச்சை தவிர்த்துட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக பா.ஜ., மாநில செயலர் அமர்பிரசாத்: அ.தி.மு.க., ஆட்சியில், 'சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பை சரியாக செய்யவில்லை' என, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பெரும் குற்றச்சாட்டை சொல்லி வந்தார். ஆனால், அவரே ஆட்சிக்கு வந்து, நாலரை ஆண்டுகளை கடந்த பின்பும், ஒவ்வொரு மழைக்கும், சென்னை வெள்ளக்காடாகவே மாறி விடுகிறது. வரும் சட்டசபை தேர்தலில், இதற்கு பரிசளிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
டவுட் தனபாலு: அதான் இல்லை... தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு, வெள்ள நிவாரணமா, தலா, 5,000 அல்லது 6,000 ரூபாயை பரிசா குடுத்து, சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை அள்ளிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: சென்னை, பல்லாவரத்தில், நாளை த.மா.கா., பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், 1,250 பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மத்திய அரசை பாராட்டியும், மாநில அரசை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
டவுட் தனபாலு: பெரும்பாலும், த.மா.கா., பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் எல்லாம் காதும் காதும் வச்ச மாதிரி நடந்து முடிஞ்சிடுமே... இந்த முறை தேர்தல் வர்றதால, 'எங்களிடமும், 1,250 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்காங்க' என்பதை, கூட்டணி தலைமைக்கு உணர்த்த வெளிப்படையா நடத்துறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll

