PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி: தீபாவளி நாளில் மது விற்பனை உயர்ந்திருந்தாலும், மற்ற நாட்களில் உயராமல் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட வேண்டும். பண்டிகை சூழல் வந்ததும், அதிகம் பேர் கூடுதல் எண்ணிக்கையில் மது வாங்கி, குடிக்கின்றனர். பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் விஷயத்தையும் அரசு தரப்பில் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
* டவுட் தனபாலு: மதுவிலக்கில் என்ன விஞ்ஞானம் மறைஞ்சு கிடக்குன்னு ஆராய்ச்சி பண்றீங்க என்ற, 'டவுட்' வருதே... முதல்வரின் ஒரே கையெழுத்துல, 'டாஸ்மாக்'கை இழுத்து மூடுறதை விட்டுட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஆராய்ச்சி பண்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடப்போர் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால், தலைமைக்கு, 10 நாட்கள் கெடு விதித்திருப்பதாக செய்தி வெளியாகி விட்டது. '10 நாட்களுக்குள் இதற்கான பேச்சு துவங்க வேண்டும். இதற்காக, ஒரு மாதத்தில் இருந்து ஒன்றரை மாதம் கூட எடுத்துக் கொள்ளலாம்' என்றுதான் சொல்லி இருந்தேன். சில மாதங்கள் கடந்தும் ஒன்றும் நடக்கவில்லை; வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்; எல்லாம் நல்லதாகவே நடந்து முடியும்.
* டவுட் தனபாலு: உங்களது கெடு, அ.தி.மு.க.,வில் பெரும் புயலை கிளப்பும்னு எதிர்பார்த்தீங்க... ஆனா, புஸ்வாணமா போயிடுச்சு... 'பொறுத்திருந்து பாருங்க; நல்லதே நடக்கும்' என்ற உங்களது கருத்தை கேட்கிறப்ப, மற்றொரு சசிகலாவா மாறிட்டு வர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தீபாவளியையொட்டி, 789 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பது, 'டாஸ்மாக்' மாடல் அரசின் கோர முகத்தை காட்டுகிறது. தி.மு.க., அரசும், முதல்வர் ஸ்டாலினும், சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, மது விற்பனை உச்சம் தொட்டுள்ளது.
* டவுட் தனபாலு: எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், 'டாஸ்மாக்' இந்த சாதனையை படைத்திருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை... வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்குவதால், 'குடி'மகன்கள் கதகதப்பாக இருக்க, மது பாட்டில்களை வாங்கி குடிச்சதும், இந்த சாதனைக்கு ஒரு காரணம் என்பதிலும், 'டவுட்' இல்லை!
---------

