
பா.ம.க., தலைவர் அன்புமணி: நகராட்சி நிர்வாகத் துறையில் பொறியாளர்கள், அதிகாரிகள் நியமனத்தில், 888 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, 250 பக்க குற்றச்சாட்டை அமலாக்கத்துறை, தமிழக காவல் துறைக்கு அளித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டட அனுமதி வழங்கியதில், 2,000 கோடி ரூபாய் ஊழல், மணல் கொள்ளையில், 4,800 கோடி ரூபாய் ஊழல், கனிமவள கொள்ளையில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல்களை திசை திருப்பவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி தி.மு.க., விமர்சிக்கிறது.
டவுட் தனபாலு: வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தி.மு.க., விமர்சித்தாலும், நீங்க பட்டியல் போட்ட ஊழல் விவகாரங்களை எல்லாம், தமிழக மக்கள் மறக்க மாட்டாங்க... எல்லாத்தையும் மனசுக்குள்ள புதைச்சுக்கிட்டு, தேர்தல் நாளில் தங்களது தீர்ப்பை தெளிவா எழுதிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: 'தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு, வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி வழங்கியது போல், முதன்மை செயலர் நேருவின் மகன் அருண்குமார் எம்.பி.,க்கு, திருச்சி மத்திய மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
டவுட் தனபாலு: நேருவுக்கும், 72 வயசாகுது... 'ஊழியர்கள் பணி நியமனத்துல ஊழல்'னு, அவரது தலைக்கு மேல அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிட்டு இருக்கு... என்னதான் மகன் எம்.பி.,யாக இருந்தாலும், கட்சியிலும் பதவி முக்கியம் என்பதால், அடுத்த வாரிசை தயார் பண்றாரு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து, யோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், தாராபுரம் அருகே இதேபோல் பாலம் கட்ட தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இருசக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி பலியாகினர். இது, தி.மு.க., அரசின் தொடர் அலட்சியத்தையே காட்டுகிறது. அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பது தான், 'நாடு போற்றும் நல்லாட்சி'யின் லட்சணமா?
டவுட் தனபாலு: 'நாடு போற்றும் நல்லாட்சி என்றால், விபத்துகளே நடக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா...? பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் இதுபோன்ற விபத்துகள் நடந்ததே இல்லையா' என, தி.மு.க.,வினர் திருப்பி கேட்டால், தங்களிடம் பதில் இருக்குமா என்ற, 'டவுட்' வருதே!

