PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அன்புமணியிடம் இருப்பது கட்சி அல்ல; ஒரு கும்பல். பா.ம.க., பெயர், கொடி, என் பெயரை, அவர் பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் தனிக்கட்சி துவங்கலாம். வரும் டிச., 30ம் தேதி சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசலில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு, யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
டவுட் தனபாலு: உங்க மகன் தலைமையில் இயங்கும் கட்சி, தி.மு.க.,வை கடுமையாக விமர்சிப்பதால், அ.தி.மு.க., - பா.ஜ., அணியில் ஐக்கியமாகும் என்பது, 'டவுட்' இல்லாம தெரிஞ்சிடுச்சு... மகன் இருக்கும் இடத்தில் நீங்க இருக்க மாட்டீங்க என்பதால், உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தி.மு.க., தான்... இதுக்கு போய், எதுக்கு பொதுக் குழுவை எல்லாம் கூட்டி முடிவெடுக்கணும் என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினேன்... தி.மு.க., கூட்டணியில் நான் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்தேன். பல்வேறு பிரச்னைகளில், தி.மு.க.,வுடன் இணைந்து குரல் கொடுத்து வரு கிறேன். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன்.
டவுட் தனபாலு: உங்க அமைப்புக்கு, அஞ்சாறு சீட்களையா, தி.மு.க.,வுல அள்ளி கொடுத்துடப் போறாங்க... 'ஒரே ஒரு சீட்; அதுலயும் நீங்க தான் நிற்கணும்; அதுவும், தி.மு.க., சின்னத்துல தான் நிற்கணும்'னு சொல்லுவாங்க... அதனால, நீங்க விரும்பும் தொகுதியில இப்பவே தேர்தல் பணிகளை துவக்கிடலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாங்கள் கூட்டணிக்கு காத்திருப்பதில்லை. தேர்தலில், 10.5 சதவீத ஓட்டுகளை வைத்திருந்த விஜயகாந்த், கூட்டணி வைத்ததால் என்ன ஆனார் என்பதை அனைவரும் பார்த்தோம். எனவே, எக்காரணம் கொண்டும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்; தமிழகத்தின், 234 சட்டசபை தொகுதி களிலும் தனித்து தான் போட்டி.
டவுட் தனபாலு: ஆனா, நீங்க தனித்து போட்டியிடுவது, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதற அடித்து, ஆளுங்கட்சிக்கு தானே லாபமாக முடிகிறது... இதனால, 'ஆளுங்கட்சியின் பி டீம்'னு உங்களை, பிற கட்சிகள் விமர்சனம் பண்ணுமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

