
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மீது, தி.மு.க.,விற்கு எவ்வித அச்சமோ, பதற்றமோ கிடையாது. வரும் பிப்ரவரியில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், பணிகளை முறையாக மேற்கொள்ள கால அவகாசம் இல்லை.
டவுட் தனபாலு: அவகாசம் தேவைன்னு ஒற்றை வரியில் முடிக்காமல், அப்புறம் எதற்கு, 'இது, குறிப்பிட்ட வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்து, பா.ஜ., வெற்றிபெற திட்டப்படும் சதி'ன்னு முழங்கினீங்க? அது சரி... பிப்ரவரியில் தேர்தல் அறிவிப்பாங்கன்னு எப்படி உங்க மனசு பட்சி சொல்லுதுங்கிற, 'டவுட்'டை தீர்த்து வையுங்களேன்!
lll
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி: கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான் தலைமை தாங்குகிறது. தேர்தலில் வென்று, அ.தி.மு.க., மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். கூட்டணியில், பழனிசாமியாகிய நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை, அமித் ஷாவே அறிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: கூட்டணி ஆட்சிக் கனவில் உங்க கூடவே பயணிக்கும் கட்சிகளுக்கு இதை சொல்றீங்களா... குழப்பத்தில் இருக்கும் உங்க கட்சி தொண்டர்களுக்கு தெளிவுபடுத்துறீங்களா... இல்லை, 'பா.ஜ.,வே ஒப்புக்கொண்டபோது, உங்களுக்கு எதற்கு அதிகப்படியான ஆசை'ன்னு, விஜய்க்கு அறிவுறுத்துறீங்களா... ஒரே, 'டவுட்'டா இருக்கே...!
அ.தி.மு.க.,வின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் பதவியை, அடிப்படை தொண்டர்களின் ஓட்டுரிமையின் வழியே தான் தேர்வு செய்ய வேண்டும்; இது தான் கட்சி விதி. இதை மாற்றியுள்ளனர்.
டவுட் தனபாலு: அந்தப் பொதுச் செயலர் பதவியை அப்படியே துாக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டு வந்தபோது, அ.தி.மு.க., கட்சி விதிகளை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!
lll
இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: அ.தி.மு.க., ஒரு ஜனநாயக வடிவம். தி.மு.க., இருப்பது எவ்வளவு நல்லதோ, அந்த அளவுக்கு ஜனநாயக கட்சிகள் இருப்பது நல்லது. ஆனால், பழனிசாமியின் குரல், ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது.
டவுட் தனபாலு: 'தி.மு.க.,வையும், அ.தி.மு.க., வையும் நம்பித் தான், தமிழகத்தில் எங்க வண்டி ஓடுது... இந்த நிலையில், போக்கிடம் இல்லாத அளவுக்கு எங்களை தவிக்கவிட்டது சரியா'ங்கற உங்க கவலை, 'டவுட்'டே இல்லாமல் புரியுது...!
lll

