PUBLISHED ON : நவ 14, 2025 12:00 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு: திறமையானவர்களை முதல்வர் பயன்படுத்திக் கொள்வதால் தான், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வழங்கப் பட்டுள்ளது.
டவுட் தனபாலு: அட்ரா சக்கை! அப்படின்னா, உங்க கட்சியில திறமையானவங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்ன்னு, நீங்களே ஒப்புக்குறீங்கன்னு, 'டவுட்'டே இல்லாம புரியுது!
lll
பத்திரிகை செய்தி: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த திட்டத்துக்கு எதிராக நாகர்கோவிலில், தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, காங்., அமைதியாக புறக்கணித்தது. ஆர்ப்பாட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில், காமராஜர் படம் வைக்கப்படவில்லை. ராகுல் படம், 'ஸ்டாம்ப் சைஸ்' மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தரப்பில், இதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.
டவுட் தனபாலு: இந்த மறைமுக அடிதடி, அவமானப்படுத்துறது எல்லாம், தேர்தல் நெருங்க நெருங்க சரியாகப் போயிடும்ன்னு, ரெண்டு தரப்பு தலைமைக்கும் புரியும்கிறது, தொண்டர்களுக்குப் புரியவில்லையோ என்ற, 'டவுட்' எழுகிறதே!
lll
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: டில்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை, கரூர் சம்பவத்தில், செந்தில் பாலாஜி நாடகம் ஆடியதுடன் ஒப்பிட்டு, தி.மு.க.,வினர் அவதுாறு பரப்புகின்றனர். இந்தியா மீதான வெறுப்புணர்வால், இது போன்ற கருத்துகளை கூறும் நபர்களை, தேசிய புலனாய்வு துறையினர் கண்காணிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: தேசிய புலனாய்வு துறை கண்காணிக்க ஆரம்பிச்சா, முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களில் பலர் காணாமல் போய் விடுவர். அது தெரிஞ்சு தான், முன்னாள், இன்னாள் புலனாய்வு அமைப்பினர், 'சைலன்ட்'டா இருக்காங்களோன்னு, 'டவுட்' வருது!
lll
த.வெ.க., தலைவர் விஜய்: எல்லா வகையிலும் கபட நாடகமாடும், தி.மு.க.,வின் அவல ஆட்சியின் லட்சணங்களை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மக்கள் சக்தியின் மதிப்பை, வரும் சட்டசபை தேர்தலில், மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதுாறு மன்னர்களை உணர செய்வோம்.
டவுட் தனபாலு: இன்னும் ஆறே மாதங்கள்... யார் மனசுல அவதுாறு; மக்கள் மனசுல யார்ங்கிற உண்மை, 'டவுட்' இல்லாம தெரிஞ்சிடுமே!
lll

