PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: ஜன., 2ம் தேதி, திருச்சி உழவர் சந்தையில் இருந்து, என் தலைமையில் நடக்க உள்ள சமத்துவ நடைபயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். ஜன., 12ம் தேதி மதுரையில் நடைபயணத்தை நிறைவு செய்கிறோம். கோவையில் மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் போல பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் நடைபயணத்தின் நோக்கம். என் அரசியல் வாழ்க்கையில், இது ஒன்பதாவது நடைபயணம்.
டவுட் தனபாலு: 'டாஸ்மாக்' மூடல், முல்லை பெரியாறு உட்பட பல பிரச்னைகளை வலியுறுத்தி, இதுவரை எட்டு நடைபயணங்களை நடத்தினீங்களே... அந்த நடைபயணங்களால, அந்த விவகாரங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைச்ச மாதிரி தெரியலையே... அதே மாதிரி இந்த நடைபயணமும் ஆகிடாம இருக்குமா என்ற, 'டவுட்'தான் வருது!
lll
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன்: ஜன., 28ம் தேதி கும்பகோணம் சுவாமிமலை பகுதியில் உள்ள மைதானத்தில் நம் கட்சியின் மாநாட்டை நடத்துகிறோம். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையை தெளிவுபடுத்தும் மாநாடாக, இம்மாநாடு அமையும்.
டவுட் தனபாலு: நீங்க, காலம் காலமாக தி.மு.க., அணியில் தான் நீடிக்கிறீங்க... இனியும் நீடிக்க போறீங்க... போன, 2021 சட்டசபை தேர்தலப்ப, உங்க கட்சிக்கு மூணு சீட்கள் தந்தாங்க... தேர்தல் நெருக்கத்துல கூட்டத்தை காட்டி, மூணு சீட்களை விட அதிகமா வாங்கணும்னு தான் மாநாடு நடத்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
பா.ம.க., தலைவர் அன்புமணி: தேர்தல் நேரத்தில் பா.ம.க., வினரான நாம், கோட்டை விட்டு விடுகிறோம்; அதை தொடரக்கூடாது. பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, வீடு வீடாக சென்று விளக்க வேண்டும். இன்னும், 108 நாட்களில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நம் மாவட்ட செயலர்களில் சிலர், அடுத்த சில மாதங்களில் எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக மாற இருக்கின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... நாட்டையே ஆளும் பா.ஜ.,வுக்கே அமைச்சரவையில் பங்கு தர முடியாதுன்னு அ.தி.மு.க.,வினர் சொல்றாங்க... உங்க கட்சிக்கெல்லாம் உள்ளாட்சி தேர்தல்ல மேயர் பதவியாவது தருவாங்களா என்பதே, 'டவுட்'தான்!
lll

