PUBLISHED ON : டிச 09, 2025 03:07 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: தமிழக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்கிறேன். அவர், த.வெ.க., பிரசாரச் செயலராக நியமிக்கப்படுகிறார். த.வெ.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நாஞ்சில் சம்பத், உங்க கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு வந்த மாதிரி தெரியலையே... பல வருஷங்களுக்கு முன்னாடி, அ.தி.மு.க.,வில் சேர்ந்த அவருக்கு, 'இன்னோவா' காரை, முன்னாள் முதல்வர் ஜெ., வழங்கினாங்க... ஒரு வேளை அது பழசாகிட்டதால, புது கார் கிடைக்கும்னு உங்க கட்சியில் சேர்ந்திருக்காரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக துணை முதல்வர் உதயநிதி: அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தை, பா.ஜ.,வுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றால், தமிழகத்தை, பா.ஜ.,விடம் விற்று விடுவர். பா.ஜ.,வின் அடிமையாக அ.தி.மு.க., செயல்படுகிறது. பா.ஜ., எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், 'ஆமாம் சாமி' போடுவதிலேயே குறியாக உள்ளனர். 'அமித் ஷா திராவிட முன்னேற்ற கழகமாக' அ.தி.மு.க., மாறி விட்டது.
டவுட் தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும், காங்., - கம்யூ., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும், கிட்டத்தட்ட உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த மாதிரி தானே செயல்படுகின்றன... நீங்க எது செஞ்சாலும், 'ஆமாம் சாமி' போடும் கூட்டணி கட்சிகளை கூடவே வச்சிக்கிட்டு, எதிரணியை விமர்சிக்கலாமா என்ற, 'டவுட்' தான் வருது!l
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: 'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத நல்லிணக்கம் இருக்கிறதா' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கேட்கிறார். அப்படி மத நல்லிணக்கம் இருப்பதால் தான், பீஹார் போன்ற மாநிலங்களில், தொடர்ந்து, பா.ஜ.,வுக்கு மக்கள் வாய்ப்பு தருகின்றனர். மக்களிடையே மத வேற்றுமையை ஏற்படுத்துவது, தி.மு.க., தான். முதல்வர் ஸ்டாலின் உட்பட, தி.மு.க.,வினர் யாருமே, ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவது இல்லை.
டவுட் தனபாலு: பீஹார் மட்டுமா... மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மக்கள், மீண்டும் மீண்டும், பா.ஜ.,வுக்கு தானே ஓட்டு போடுறாங்க... தமிழகத்திலும், போலி மதச்சார்பின்மைக்கு முடிவு கட்டும் காலம், வெகு சீக்கிரம் வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

