PUBLISHED ON : டிச 17, 2025 03:28 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்: தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம், ஒட்டுமொத்தமாக தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும். தி.மு.க., கூட்டணியில், இம்முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்தும்போது இதை நிச்சயம் தெரிவிப்போம்.
டவுட் தனபாலு: அட, 20 என்னங்க... 200 தொகுதிகளில் கூட போட்டியிட விருப்பம் இருக்குன்னு தி.மு.க.,விடம் சொல்லுங்க... தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நீங்க என்ன தான் உருண்டு, புரண்டாலும், போன தேர்தலில் தந்த மூணு சீட்களுக்கு மேல போட்டு தருவாங்களா என்பது, 'டவுட்' தான்!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த ஆணவத்தில், பா.ஜ., அரசும், அவர்களை ஆதரிக்கும் பிற்போக்கு சக்திகளும் ஆக்ரோஷத்துடன் செயல்படுகின்றன. நம் கொள்கை எதிரிகள், துணை முதல்வர் உதயநிதியை, 'மிகவும் ஆபத்தானவர்' என்று புலம்புகின்றனர். அந்த அளவிற்கு கொள்கையில் உதயநிதி உறுதியாக உள்ளார்.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சியினருக்கு உதயநிதி ஆபத்தானவரா, இல்லையான்னு தெரியாது... ஆனா, சட்டசபை தேர்தலில், அவர் கை காட்டுவோருக்கு தான் 'சீட்' என்று தகவல்கள் உலா வருவதால், உங்க கட்சிக்கு காலம் காலமாக உழைச்சிட்டு, சீட்டுக்காக காத்திருக்கும் சீனியர்கள் பலருக்கு, உதயநிதி மிக மிக ஆபத்தானவர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அங்கு, நான்கு மாநகராட்சிகள், 54 நகராட்சிகளை கைப்பற்றி, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் நடக்க உள்ள கேரள சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, இத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
டவுட் தனபாலு: 'கேரள உள்ளாட்சி தேர்தல்களில் அதிக சீட்கள் ஜெயிச்சிருக்கோம்'னு சொல்லி, தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்க நீங்கதிட்டம் போடுவது, 'டவுட்' இல்லாம தெரியுது... ஆனா, தி.மு.க.,வோ, உங்களது பீஹார் தோல்வியை சுட்டிக்காட்டி, சீட்களை குறைச்சிடும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

