PUBLISHED ON : ஜன 16, 2026 01:49 AM

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தி.மு.க., கூட்டணியில், இப்போது இருக்கும் கட்சிகள் தான் நீடிக்கின்றன; புதிதாக யார் இணைகின்றனர் என அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியிலும் புதிய கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, காத்திருந்து நல்ல முடிவு எடுப்போம். தை பிறந்ததால், தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள், தே.மு.தி.க., கூட்டணியை உறுதி செய்யும்.
டவுட் தனபாலு: உங்களது காத்திருப்பை பார்த்தால், கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்க போற மாதிரி தெரியலையே... சீட்களையும், தேர்தல் செலவுக்கு பல கோடிகளையும் எந்த கட்சி அதிகமா தருதுன்னு பார்த்துட்டு, கூட்டணி முடிவை அறிவிக்கலாம்னு, 'வெயிட்' பண்ணிட்டு இருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.ம.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: கூட்டணி விவகாரத்தில், அ.ம.மு.க.,வுக்கு தயக்கம், குழப்பம், அழுத்தம் என்ற பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. கூட்டணி தொடர்பாக, பொதுச் செயலர் தினகரனுக்கு எந்தவிதமான தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை. உரிய நேரத்தில், கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை தினகரன் அறிவிப்பார்.
டவுட் தனபாலு: தே.ஜ., - தி.மு.க., - த.வெ.க.,ன்னு மூணு பக்கமும் கதவுகளை திறந்து வச்சிட்டு பேச்சு நடத்துறதால தான், இந்த மாதிரி தகவல்கள் பரவுதுன்னு உங்க கட்சியினரே பேசிக்கிறாங்க... சட்டுபுட்டுன்னு ஒரு கூட்டணிக்குள்ள போயிட்டு கதவுகளை அடைச்சிட்டா, இந்த மாதிரி வதந்திகள் பரவாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தி.மு.க., 2021ல் அளித்த தேர்தல் வாக்குறு தியில், 'ஜல்லிக்கட்டு காளை களை வளர்ப்போருக்கு, ஊக்கத் தொகையாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்' என அறிவித்தது. நான்கரை ஆண்டு களாக இதை நிறைவேற்றவில்லை. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு, 'அல்வா' கொடுத்த தி.மு.க., அரசுக்கு, ஒட்டுமொத்தமாக கடிவாளம் போட்டு அடக்கி வைக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை.
டவுட் தனபாலு: ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை வழங்காத முதல்வர், நாளை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க போறாரே... அப்ப, அவரிடம் இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் துணிச்சல் யாருக்காவது இருக்குமா என்ற, 'டவுட்' வருதே!

