PUBLISHED ON : ஜன 17, 2026 04:09 AM

தமிழக, பா.ஜ., பொதுச் செயலர், ராம.சீனிவாசன்: மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும், தி.மு.க.,வுக்கும் வித்தியாசம் உள்ளது... இந்த தேசத்துக்கு எதிரான சித்தாத்தங்களை கொண்டது, தி.மு.க., சனாதன கொள்கைகளை ஒழிப்பது குறித்து பேசும் அக்கட்சியின் தலைவர்கள், நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்புகளை பற்றி பேசுவதில்லை.
டவுட் தனபாலு: பா.ஜ., போல, பொருளாதாரம், வேலைவாய்ப்பு பற்றி பேசி, மக்களிடம் எடுபடாமல் போய் விடுவோமோ என, தி.மு.க., நினைத்திருக்குமோ என்ற, 'டவுட்' எழுவது நியாயம் தானே சார்!
நடிகர் எஸ்.வி.சேகர்: த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்க்கு வயது, 50 தான் ஆகிறது. அவர் வயதை ஒத்த அரசியல் அனுபவம் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூட, விஜயை புகழ்கிறார் என்றால், நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறுவது கடினம் தான். ஏனெனில், பாறாங்கல் போன்ற, பா.ஜ.,வை கட்டிக் கொண்டு, அ.தி.மு.க., தேர்தல் களத்தில் குதித்துள்ளது. கல்லுக்கு எப்போதும் எதுவுமே ஆவதில்லை. அதை கட்டிக் கொண்டு குதிக்க உள்ள, அ.தி.மு.க.,வுக்கு தான் பாதிப்பு.
டவுட் தனபாலு: பா.ஜ.,வை பாறாங்கல்ன்னு ஒப்புக்கிறீங்களா... அதனால் தான், தி.மு.க.,வில் ஐக்கியமாகி இருக்கிற நீங்களும் பயப்படுறீங்களோன்னு, 'டவுட்' வருதே?
'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர், எஸ்.குருமூர்த்தி: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், தமிழக அரசில் தான் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தான், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. தெய்வ நம்பிக்கையை, தி.மு.க., அழிக்கிறது.
டவுட் தனபாலு: 'கடவுள் கிடையாது; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி' என, கூறுபவர்களை தலைவர்களாக கொண்ட, தி.மு.க., அரசு தான், தமிழக கோவில்களின் தற்போதைய பிரச்னைகளுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே கிடையாது!

