PUBLISHED ON : ஜன 22, 2026 03:56 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: மகளிருக்கு மட்டும் இலவச பயண திட்டத்தை அறிவித்து, ஒன்றாக இருக்கும் குடும்பத்தில் கணவன் - மனைவியிடையே சண்டையிடச் செய்து, தி.மு.க., அரசு பிரித்துள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில், ஆண்களுக்கும் இலவச பயணம் என்ற திட்டத்தை பழனி சாமி அறிவித்துள்ளார். இனிமேல் , ஆண்கள், தங்கள் மனைவியோடும், காதலியோடும் அரசு பஸ்சில் சினிமாவிற்கு செல்லலாம்; வணிக வளாகங்களுக்கு செல்லலாம்; ஊர் சுற்றலாம்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., வுக்கு உலை வைப்பதற்கென்றே பிறந்துள்ள சிலரில் நீங்களும் ஒருத்தர்ங்கிறதை உறுதி செஞ்சிட்டீங்க. உங்க பேச்சு, கட்சிக்கு ஓட்டைச் சேர்க்காது; மாறாக, பெண்கள் துடைப்பக்கட்டை சகிதமாக உங்களை நோக்கி ஓடி வருவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!
திண்டுக்கல் மா.கம்யூ., - எம்.பி., சச்சிதானந்தம்: மாநில அரசு தயார் செய்யும் கொள்கை அறிக்கையை, திருத்தம் செய் யுமாறு கவர்னர் கூறலாம். அதை, மாநில அரசு திருத்தம் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். கொள்கை அறிக்கையை வாசிக்க வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் அவர், அந்த கடமையை செய்ய மறுக்கிறார். அரசியல் கட்சி தலைவர் போல் கவர்னர் நடந்து கொள்கிறார். அவர் வெளிநடப்பு செய்தது, தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
டவுட் தனபாலு: ஓ... அப்படியா... உங்கள் கூட்டணித் தலைமை கட்சி யான தி.மு.க.,வின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதெல்லாம், 'அ.தி.மு.க.,வின் கொள்கை அறிக்கையை, சட்டசபையில் அப்படியே வாசிக்கிறார் கவர்னர். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என, கூட்டத்திற்கு கூட்டம், சட்டசபை வளாகத்தில் நின்று குரல் கொடுத்தாரே... அதெல்லாம், புனிதமான வசனங்களாங்கிற, 'டவுட்'டை, இப்போது நிவர்த்தி செய்யுங்களேன்!
கட்சி நிர்வாகிகளிடையே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு: கூட்டணி கட்சிகளில், நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்கள் தேவையில்லாத கருத்துக்களை பேசி, கூட்டணி யில் குழப்பம் விளைவிக்க நினைக்கலாம். அந்த சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகி விடக் கூடாது.
டவுட் தனபாலு : இப்ப என்ன சொல்ல வர்றீங்க... 'கூட்டணி கட்சிக்காரங்க, முன்ன பின்ன பேசினாலும், எதையும் கண்டுக்காதீங்கப்பா... நீங்க ஏதாவது பதில் சொல்லி, கூட்டணியில விரிசல் விழுந்திருச்சின்னா, நம்ம கதை கந்தலாகிடும்'ன்னு சொல்ல வர்றீங்களோங்கிற, 'டவுட்' வருதே?

