PUBLISHED ON : ஜன 23, 2026 04:01 AM

அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை: கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே தவிர, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் கிடையாது. அதில், எங்கள் பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக உள்ளார். தமிழகத்தில், இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததே கிடையாது. அதுபோல, 2026ம் ஆண்டிலும் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்.
டவுட் தனபாலு: தனித்தே ஆட்சி அமைக்கும் அளவுக்கு உங்க கட்சிக்கு பெரும்பான்மை கிடைச்சிடும்னு நம்புறீங்களா... இன்று, மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துக்கிற பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் உங்க தலைவர் பழனிசாமி, 'தமிழகத்தில் தனித்தே ஆட்சி' என தைரியமாக முழங்குவாரா என்ற, 'டவுட்' எழுதே!
lll
பத்திரிகை செய்தி: தி.மு.க., சார்பில், வரும் 26ம் தேதி, 'டெல்டா மண்டல, வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு' தஞ்சாவூரில் நடக்கவுள்ளது. பிப்., 11ல், சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல மாநாடு, தாம்பரம் படப்பையிலும்; பிப்., 14ல், வடக்கு மண்டல மாநாடு திருப்பத்துாரிலும்; பிப்., 21ல், தெற்கு மண்டல மாநாடு மதுரையிலும்; பிப்., 27ல், மேற்கு மண்டல மாநாடு கோவையிலும் நடத்தப்படும். மார்ச் 8ல், திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும், 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்' என்ற மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.
டவுட் தனபாலு: ஏற்கனவே, இளைஞர் அணி சார்பிலும், மகளிர் அணி சார்பிலும் தலா ஒரு மாநாட்டை நடத்தி முடிச்சிருக்காங்க... அடுத்தடுத்து மாநாடுகளை நடத்திட்டே இருந்தால், அதுக்கான ஏற்பாடுகள்ல காசு செலவழிச்சு தீவிரமா உழைக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் நேரத்தில் களைச்சி போயிட்டா, வெற்றிக்கு வேட்டு வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி கூட்டணிக்கு செல்லும் மனநிலையில் இருக்கும் காங்., கட்சியை வழிக்கு கொண்டு வர, விரைவில் நடைபெற இருக்கும் அசாம் சட்டசபை தேர்தலில், காங்., கட்சிக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக, தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: அடடா... அரசு துறைகளில் காரியம் சாதிக்க லஞ்சம் தருவது போல, அரசியல் கூட்டணியை தக்க வைக்கவும், இதுபோன்ற லஞ்சங்களை தரணுமோ என்ற, 'டவுட்' வருதே... அடுத்த அஞ்சு வருஷமும் தி.மு.க.,வே ஆட்சியில் நீடிச்சா, 2029 லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க காங்., கட்சிக்கான செலவை ஏத்துக்குவாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
lll

