PUBLISHED ON : மார் 15, 2026 02:05 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகத்தில், போலீஸ் காவலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் பிரச்னையாக உள்ளது. தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் அவசியம். இத்துறையை முழுமையாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை, அனைவருக்கும் உளவியல் ரீதியான மதிப்பீடு மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு போலீஸ் சீர்திருத்த கமிஷன் அமைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: கடந்த அஞ்சு வருஷங்களா, போலீஸ் சீர்திருத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்காதவங்க, இனிமே மட்டும் எடுத்துடுவாங்களா... காவல் துறை மீது குறை சொல்ற சாக்கில், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை தான் நீங்க குறை சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: தேர்தல் கருத்து கணிப்பில், தே.ஜ., கூட்டணிக்கு 21 சதவீதம், த.வெ.க.,வுக்கு 34 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. விஜய் ஊர்வலமாக வந்தால், இது 50 சதவீதமாக உயரும். த.வெ.க., 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும். எனவே, யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, பழனிசாமியை முதல்வராக்க மாட்டோம்' என, நீங்க சொல்ல வர்றது, 'டவுட்' இல்லாம புரியுது... அதே நேரம், ஸ்டாலினே மீண்டும் முதல்வரானாலும் பரவாயில்லை... என்னை கட்சியை விட்டு துாக்கி எறிந்த பழனிசாமி மட்டும் முதல்வராகி விட கூடாதுன்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த பிப்., 27ல் தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று, முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கி உள்ளார். இதன்படி, பன்னீர்செல்வம் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் கிளம்புகிறார்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வில், மாநில அளவில் சுற்றுப்பயணம் போகும் தகுதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டும் தான் உண்டு... அந்த வகையில் ஸ்டாலின், உதயநிதி மட்டும் தான் மாநிலம் முழுக்க பிரசாரத்துக்கு போவாங்க... பன்னீர்செல்வத்துக்கு தந்திருக்கும் இந்த அந்தஸ்து, தேர்தல் வரைக்கும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

