PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:28 AM

வேலுார் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தி.மு.க.,வினராக இருப்பதால், மாமன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டப்பட்டுள்ளது. அங்கு, முன்னாள் முதல்வர் என்ற முறையில், பழனிசாமி படத்தையும் மாட்டக் கோரி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அளித்த பேட்டியில், 'முறையான ஒப்புதல் இல்லாமல், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் மன்றத்தில் மாட்டப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தையும் மாட்ட வேண்டும். அனுமதிக்காவிட்டால் நாங்களே எடுத்து வந்து மாட்டுவோம்' என்றனர்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'வேலுார்ல ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கு... அதை கவனிக்கிறதை விட்டுட்டு, படம் மாட்டுறதுக்கு போய் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காங்களே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
