PUBLISHED ON : மே 07, 2026 12:53 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கடந்த ஐந்தாண்டு காலத்தில், ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில், எங்கள் சாதனைகளை சொல்லியே ஓட்டு கேட்டோம். ஆயினும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இதுவரை மக்களுக்கு சிறப்பான ஆளுங்கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.
டவுட் தனபாலு: இவ்வளவு செய்தும் ஏன் தோற்று போனீங்க...? 24 மணி நேரமும் நடந்த மது, கஞ்சா விற்பனை, சட்டம் - ஒழுங்கு சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்னு உங்க ஆட்சிக்கு கரும்புள்ளிகளா இருந்ததை ஊடகங்கள்ல பலமுறை சுட்டிக்காட்டினாங்களே... அவற்றை எல்லாம் கண்டும், காணாமலும் இருந்ததுதான் உங்களது இன்றைய தோல்விக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை இழந்தது. இதையறிந்த திருப்பூர் விஜயாபுரம், காட்டுப்பாளை யத்தை சேர்ந்த தி.மு.க., கிளை பொறுப்பாளர் ஹபி, 60, என்ப வர் மது போதையில், பேக்கரி ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்த நிலையில், கண்ணாடி டம்ளரை உடைத்து, கழுத்து மற்றும் உடலில் கிழித்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., எத்தனையோ தேர்தல்களில் தோத்திருக்குது... அந்த கட்சியின் எந்த முன்னணி தலைவராவது இந்த மாதிரி விபரீத முடிவை எடுத்திருக்காங்களா... சுயநல தலைவர்களுக்காக, அப்பாவி தொண்டர்கள், தங்களது உயிரை பணயம் வைக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மக்கள் தான் இங்கு நீதிபதிகள். எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர் ., ஜெயலலிதா நல்லாசி யுடன், 'பீனிக்ஸ்' பறவை போல், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்; என்றென்றும் மக்கள் பணியில் ஈடுபடும்.
டவுட் தனபாலு: உங்க தலைவி ஜெ., ஒரு தேர்தலில் தோற்றாலும், அடுத்த தேர்தலில் அபாரமாக ஜெயிச்சு ஆட்சியை பிடிச்சிடுவாங்க... ஆனா, உங்க தலைமையில் கட்சி தொடர்ந்து தோத்துட்டே இருக்கே... முதியோர் இல்லமாக காட்சியளிக்கும் உங்க கட்சியில், மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டி, இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, கட்சியை மறுசீரமைப்பு செய்தால் மட்டுமே உங்க கனவு நனவாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

