PUBLISHED ON : ஜூன் 18, 2026 12:46 AM

காங்., மூத்த தலைவர் சிதம்பரம்: 'இண்டி' கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க., சொல்லவில்லை. இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது வேறு; இண்டி கூட்டணியில் இருந்து விலகுவது என்பது வேறு. இண்டி கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகுவதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
டவுட் தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட்டு, அவங்க தயவில் ஜெயித்த உங்க கட்சியினர் ஆதரவில் தான் த.வெ.க., ஆட்சி அமைஞ்சிருக்குது... அதன் பிறகும், இண்டி கூட்டணியில் தான் தி.மு.க., நீடிக்கும்னு மூத்த அரசியல் தலைவரான நீங்களே எப்படி நம்புறீங்க என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின், அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எந்தவித சமரசமும் பேசாத நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவர்களிடம் போனில் பேசுகிறார். அப்போது, 'அ.தி.மு.க.,வில் நீடிக்க வேண்டும். கட்சி மாறும் எண்ணம் இருந்தால், தி.மு.க.,விற்கு வர வேண்டும்; உரிய மரியாதை அளிக்கப்படும்' என பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... 54 வருஷங்களா, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எதிரும் புதிருமா அரசியல் பண்ணிட்டு இருந்த சூழல்ல, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வரவால, எல்லாமே தலைகீழா மாறிடுச்சே... 2031 சட்டசபை தேர்தல்ல, த.வெ.க.,வை எதிர்கொள்ள ஏதுவாக, இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்துடுமோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில் அமித் ஷா பேசுகையில், 'மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை, மக்கள் துணையுடன் பா.ஜ., அகற்றி விட்டது. அடுத்த இலக்கு தமிழகம் தான். 2029 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே துவங்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
டவுட் தனபாலு: தமிழகத்தில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க., கலகலத்து போயிருக்குது... எல்லா கூட்டணி கட்சிகளும் விலகி, தி.மு.க.,வும் தனிமரமா நிற்குது... இதனால, 2029 லோக்சபா தேர்தல்ல தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சேர்ந்து, ஆளுக்கு 20 தொகுதிகளில் போட்டியிடலாம்னு, அமித் ஷா வியூகம் வகுக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
