PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

இந்திய கம்யூ., கட்சியில் மூத்த தலைவராக இருந்து, த.வெ.க.,வில் இணைந்துள்ள மகேந்திரன்: சட்டசபை தேர்தலில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் தந்துள்ளார். அதனால், சிவப்பு துண்டோடு த.வெ.க.,வில் இணைந்துள்ளேன்.
டவுட் தனபாலு: உங்க கட்சியில் மாநில செயலர் பதவியை எதிர்பார்த்து, கிடைக்காத ஆதங்கத்தில் த.வெ.க.,வில் சேர்ந்திருப்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், கம்யூ., கட்சியால ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கவே முடியாது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: 'மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், தமிழக அரசு சார்பில் சமூக நீதி சர்வே நடத்தப்படும்' என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதல்வராக இருந்தபோது சாத்தியமாகாத ஜாதிவாரி சர்வே, முதல்வர் விஜய் ஆட்சியில் சாத்தியமாகி உள்ளது. எங்களது 46 ஆண்டுகால கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒற்றை அறிவிப்புக்காகவே, முதல்வர் விஜயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
டவுட் தனபாலு: உங்களது 46 ஆண்டுகால கனவு நனவாக போகுது... ஒருவேளை, உங்க மனைவி சவுமியாவுக்கு அமைச்சர் பதவி தர முன்வந்தால், தே.ஜ., கூட்டணிக்கு முழுக்கு போட்டுட்டு, த.வெ.க., அணிக்கு தாவிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: திருத்துறைப் பூண்டியில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க., ஒன்றிய செயலர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற செயல்கள் நடக்காமல், மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. கடந்த ஒரு மாதமாக நடப்பதை பார்த்தால், தமிழக மக்களை ஆளுங்கட்சியான த.வெ.க., நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல் இருக்கிறது.
டவுட் தனபாலு: தமிழகத்தில் நீங்க முதல்வரா இருந்தப்ப, பொள்ளாச்சியில் உங்க கட்சி நிர்வாகிகள், பெண்களை அடித்து, துன்புறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அதை வீடியோவும் எடுத்தாங்களே... அதை எல்லாம் சுட்டிக்காட்டி த.வெ.க.,வினர் பதிலடி தந்தா ஏத்துக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
