PUBLISHED ON : ஜூன் 22, 2026 12:28 AM

தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தி.மு.க., - பா.ஜ., இடையே மிக நெருக்கமான உறவு உள்ளது. பா.ஜ.,வின் மறைமுக முகமாக தி.மு.க., உள்ளது. எனவே தான், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த அனுமதி கோரும் கோப்பில், கவர்னர் இன்னும் கையெழுத்து போடவில்லை.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... கூட்டணி கட்சியினர் எல்லாம் தி.மு.க.,வை நட்டாற்றில் விட்டுட்டு ஓடிட்டாங்க... அடுத்து, வைகோவும் ஓட்டம் எடுக்க தயாராகிட்டாரு... நீங்க சொல்ற மாதிரி பா.ஜ., - தி.மு.க., கரம் கோர்த்துட்டா, தமிழகத்துல உங்க ஆட்சிக்கு கூடுதல் குடைச்சல் தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக, திராவிட கட்சிகளை போன்று அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்திருக்கிறது. 'ஒதுக்கி ஓரங்கட்டினாலும் நாங்களே மையம்' என்று அடிக்கடி நான் கூறி வந்தது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடைமுறைக்கு வந்துவிட்டது. வி.சி.க., இன்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் உருவாகி விட்டது.
டவுட் தனபாலு: உங்களை மாதிரி கூட்டணி கட்சிகள் தயவில் தான் த.வெ.க., ஆட்சி ஓடிட்டு இருக்குது... அதே நேரம், நீங்க இப்படி எல்லாம் பெருமை அடிப்பீங்கன்னு எதிர்பார்த்து தான், முன்ஜாக்கிரதையா அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா பண்ண வச்சு, த.வெ.க., பக்கம் இழுத்துட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: கவர்னர் உரை என்பது, அவரே எழுதி, அதை சட்டசபையில் வந்து படிப்பது அல்ல. ஆட்சி நடத்துவோர் எழுதி கொடுத்து, கவர்னர் மாளிகைக்கு கொண்டு போய் திருத்தப்பட்டு அல்லது அப்படியே அங்கீகாரம் பெற்று, அதை அப்படியே படிப்பது தான் கவர்னர் உரை. எனவே, அரசில் இருக்கிறவர்கள் தங்கள் ஆட்சியை பற்றி புகழ்ந்து தான் எழுதி இருப்பர். கவர்னர் அதை படித்து தான் தீர வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... அப்படி என்றால், கடந்த காலங்களில் நீங்க எழுதி கொடுத்த உரைகளை, அப்ப கவர்னரா இருந்த ரவி படிக்காம ஏன் வெளிநடப்பு செஞ்சாரு... இந்த முறை அப்படி எதுவும் நடக்காம கவர்னர் உரை சுமுகமா முடிஞ்சது, உங்க காதுல புகையை வரவழைச்சிருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
