PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி:
அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தி.மு.க., பேசவில்லை. அ.தி.மு.க., ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க., பிரிந்து, 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கட்சி எங்களுக்கு பகையாளி அல்ல; பங்காளி தான். அதற்காக கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அப்படியே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், அதில் ஒன்றும் தவறு இல்லை.
டவுட் தனபாலு:
அது சரி... எல்லா கூட்டணி கட்சிகளும் ஓட்டம் பிடிச்சிட்டதால, தனி மரமா நிற்கிறீங்க... அ.தி.மு.க.,வுல இருக்கிற பலரும் த.வெ.க., பக்கம் போய், அந்த கட்சியும் தள்ளாடிட்டு தான் இருக்குது... 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற வகையில் த.வெ.க.,வை எதிர்க்க, அ.தி.மு.க.,வுடன் கரம்கோர்க்க உங்க கட்சியினரை தயார்படுத்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எழுதியுள்ள கடிதம்:
'சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்' என, முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடந்து வரும் கவர்னர் உரை மீதான விவாதம், நேரலை செய்யப்படுவதில்லை. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஆளும் கட்சியினருக்கு வேண்டிய விவாத காட்சிகள் மட்டும், 'எடிட்' செய்யப்பட்டு, மாலையில் வெளியிடப்படுகின்றன.
டவுட் தனபாலு:
கடந்த 2021ல் நீங்க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்'னு வாக்குறுதி தந்தீங்க... அதை அஞ்சு வருஷமா செய்யாம இழுத்தடிச்சு, 'எடிட்' செய்த காட்சிகளை மட்டும்தான் வெளியிட்டீங்க... இப்ப, உங்க வழியை பின்பற்றும் த.வெ.க., அரசை குற்றம்சாட்டுவது சரியா என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடந்துள்ளது. தமிழக மக்கள், இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் எனக்கூறி, புதிய கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் இளையோரால் உருவாகி உள்ளது.
டவுட் தனபாலு:
இளைஞர்களால் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான்... அதே நேரம், மக்கள் வேண்டாம்னு நிராகரித்த திராவிட கட்சியான அ.தி.மு.க., கூட்டணியில் தான் உங்க கட்சியின் நாலு எம்.எல்.ஏ.,க்களும் ஜெயிச்சிருக்காங்க என்பதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'டும் வருது!
