PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

காங்., கட்சியை சேர்ந்த, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: முதல்வர் என்னிடம், 'அருமையான துறையை உங்களிடம் கொடுத்துள்ளேன். மிகவும் கவனமாக கையாள வேண்டும்' என தெரிவித்தார். உயர்கல்வி துறையில் பணி நியமனம், இடமாறுதல் போன்ற எந்த ஒரு நல்ல நோக்கங்களுக்காகவும் லஞ்சம் வாங்க மாட்டோம். இத்துறையில், முழுமையான ஊழலற்ற நிலையை எட்ட அரசுக்கு துணை நிற்போம். நாங்கள் லஞ்சம் வாங்கப் போவது கிடையாது; அதேசமயம் மக்களும் லஞ்சம் கொடுக்கக் கூடாது.
டவுட் தனபாலு: அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கேட்கிறதால தானே பொதுமக்கள் லஞ்சம் குடுக்கிறாங்க... மக்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை இழுத்தடிக்காம, உடனுக்குடன் செய்து குடுத்துட்டா அவங்க ஏன் லஞ்சம் தர போறாங்க... உங்களை மாதிரியே எல்லாரும் சபதம் எடுத்துட்டா, தமிழகத்தில் ஊழல் ஒழிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
----
இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: கம்யூ., கட்சிக்கு இக்கரையும் தெரியாது, அக்கரையும் தெரியாது. பசுமையான இடத்தை நோக்கி ஓடியதும் கிடையாது. தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்தினால், இந்தியா முழுதும் கம்யூ., கட்சியே வெற்றி பெறும். எங்களை எம்.பி., - எம்.எல்.ஏ., எண்ணிக்கையில் தேட வேண்டாம்.
டவுட் தனபாலு: பலமான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலே, ஒன்றிரண்டு சீட்கள்ல தான் உங்களால ஜெயிக்க முடியுது... இதுல, தேர்தல் சீர்திருத்தம் வந்துட்டா மட்டும் வானத்தை வில்லா வளைச்சிடுவீங்களோ...? உங்க நிலைமைய பாத்தா, 'ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெரு கோணலா இருக்கு'ன்னு சொன்ன கதையா இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
----
தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது, முன்பு அலங்கார பதவியாக, தேர்தலில் தோல்வியடைந்தோருக்கு வழங்கும் பதவியாக இருந்தது. தற்போது, இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல. அங்கு தொழில் செய்கிறார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். டில்லி பிரதிநிதியாக இருப்பவர், எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை; துறைகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்.
டவுட் தனபாலு: ஆந்திராவை சேர்ந்த, கர்நாடகாவில் தொழில் செய்றவரை போய், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிச்சிருக்கீங்களே... கர்நாடகாவின் மேகதாது அணை, ஆந்திராவின் பாலாறு தடுப்பணை திட்டங்களுக்கு எதிராக, டில்லியில் அவர் குரல் கொடுப்பாரா என்ற, 'டவுட்' வருதே!
