PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:20 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: முதல்வர் விஜயுடன் இணைந்திருக்கும் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்டோர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்; இவர்கள் முதுகில் குத்துவர். மற்றொரு மக்கள் நல கூட்டணியை உருவாக்குகிறார் வைகோ. அவரிடம் முதல்வர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விஜயகாந்த் போல் விஜய் பாதிக்கப்படக் கூடாது.
டவுட் தனபாலு: எம்.எல்.ஏ.,வாக இருந்த விஜயகாந்தை, முதல்வராக்குறோம்னு சொல்லி தான் மக்கள் நல கூட்டணியை வைகோ உருவாக்கினாரு... விஜய் இப்ப முதல்வராகவே இருப்பதால், 'உங்களை பிரதமராக்குறோம்'னு சொல்லி கூட்டணியில் வைகோ சேர்ந்திருப்பாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: மயிலாடுதுறையில் நடந்த வேளாண் துறை கருத்தரங்கில் பங்கேற்ற சீர்காழி தொகுதி ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் செல்வன், அக்கட்சி கொடி கட்டிய காரில் வந்தார். அவரிடம், 'நீங்கள் ம.தி.மு.க.,வில் தொடர்கிறீர்களா' என நிருபர்கள் கேட்டபோது, 'நான் எம்.எல்.ஏ.,வாக மக்கள் பணி செய்து வருகிறேன்; மக்களுக்கு தொடர்ந்து கடமை ஆற்றுவேன்' என, மழுப்பலாக பதிலளித்தார்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வின் சின்னத்தில் நின்று ஜெயித்த இவர், எந்த கட்சியில் இருக்கேன்னு சொல்லாம போக்கு காட்டுறாரே... தி.மு.க., தரப்பில் இவருக்கு தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறாத பட்சத்தில், பதவியை ராஜினாமா பண்ணிட்டு, இவரும் ஆளும் த.வெ.க.,வுக்கு தாவிடுவாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழக வெற்றி கழகத்தை, திராவிட இயக்கத்தின் ஓர் அங்கமாகவே பார்க்கிறேன். முதல்வர் விஜய், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்கி வருகிறார். 'கமிஷன்' கலாசாரத்தை ஒழித்துள்ளார். தமிழகத்தில் நடக்க உள்ள ஏழு தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது.
டவுட் தனபாலு: விட்டா, 'ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விஜய் வடிவில் பார்க்கிறேன்'னு கூட சொல்வீங்க போலிருக்கே... கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை உங்களை மாதிரி புகழவும் முடியாது; அதேநேரம், கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டா, அதே கட்சியை திட்டி தீர்ப்பதிலும் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை... உங்க வரலாறை எல்லாம் முதல்வர் விஜய் நல்லா தெரிஞ்சு வச்சிருப்பதால், இந்த பாராட்டுக்கு எல்லாம் அவர் மயங்குவாரா என்பது, 'டவுட்'தான்!
lll
