PUBLISHED ON : ஜூலை 17, 2026 02:16 AM

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தனியாருக்கு இணையாக அனைத்து சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அந்த வகையில், 'நலம் டி.என்.,' என்ற இணையதளம் வழியாக, சாமானிய மக்களுக்கான வசதிகளுக்காக, அரசு மருத்துவமனைகளை மேம் படுத்த யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பங்களிப்பு, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
டவுட் தனபாலு: ஆட்சி நிர்வாகத்துக்கு த.வெ.க.,வினர் புதியவங்களா இருந்தாலும், இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக அவங்களை பாராட்டலாம்... அதே நேரம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், டாக்டர் என்ற முறையில் இதுக்கு நீங்க வரவேற்பு தெரிவிச்சதையும், 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: எம்.எல்.ஏ.,க் களுக்கு பணமோ, பதவியோ வழங்கி, அவர்களை தக்கவைப்பது தான் குதிரை பேரம். அவ்வாறு ஏதும் நடந்திருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், தி.மு.க., தரப்பு போலீசில் புகார் அளிக்காமல், கவர்னரிடம் புகார் அளிப்பது சரியானதல்ல; இது அரசியல் நாடகம்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வினர் பல முறை ஆளுங்கட்சியா இருந்தவங்க... ஆளுங்கட்சி மீது போலீசில் புகார் கொடுத்தால், அவங்க நடவடிக்கை எடுக்க மாட்டாங்க என்பது, உங்களை விட அவங்களுக்கு நல்லாவே தெரியும்... அதனால தான், மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரிடம் போய் புகார் குடுக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: த.வெ.க., அமைச்சரவையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெறா விட்டாலும், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டன. த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்தாலும், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இ.கம்யூ., முன்னாள் மாநில செயலர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களை வைத்து, கம்யூ., கட்சிக்குள் தி.மு.க., குழப்பத்தை உருவாக்கி வருகிறது.
டவுட் தனபாலு: தங்களது கூட்டணியை விட்டு யார் வெளியில போனாலும், அந்த கட்சியை உண்டு, இல்லைன்னு பண்றது தி.மு.க.,வுக்கு கைவந்த கலையாச்சே... ம.தி.மு.க.,வுக்கும் இதே கதை தான் நடந்துச்சு... இதுக்கு பயந்து தான், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இன்னும் ஒட்டிட்டு இருக்கோ என்ற, 'டவுட்'டும் வருது!
