PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:20 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழக வெற்றிக் கழக அரசின் பொய்க்கால் குதிரை ஆட்டம் மக்களிடம் எடுபடவில்லை. 'ரீல்ஸ்' எடுப்பதிலும், விளம்பரம் செய்வதிலும் தான் அவர்கள் குறியாக இருக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கும். சம்பாதித்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக, நம்மிடம் இருந்த சிலர் ஆளுங்கட்சிக்கு ஓடுகின்றனர். அந்த துரோகிகளை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.
டவுட் தனபாலு: உங்களிடம் இருந்து ஓட்டம் பிடிச்ச பலரும் சேர்த்த சொத்துக்களை, உங்க ஆட்சியில் தானே சம்பாதிச்சிருப்பாங்க... 'உங்களிடம் அமைச்சர்களா இருந்தவங்களே பெரிய அளவில் சம்பாதிச்சிருந்தா, முதல்வர் பதவியில் இருந்த நீங்க எவ்வளவு சம்பாதிச்சிருப்பீங்க'ன்னு யாராவது திருப்பி கேட்டா, 'டவுட்' இல்லாம உங்களால பதில் தர முடியுமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி: தேர்தலின்போது என்னுடன் பயணம் செய்தவர்களும், ராமதாசுடன் பயணம் செய்தவர்களும் இனி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். செயலர், பொருளாளர், இளைஞரணி, மகளிர் அணி என புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அனைவருக்கும் உரிய அங்கீகாரம் தரப்படும். வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க.,வினர் நிறைய இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
டவுட் தனபாலு: உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சியினரை தயார்படுத்துறீங்களே... தே.ஜ., கூட்டணியில் இருந்தபடியே, அந்த தேர்தலை சந்திக்க போறீங்களா அல்லது த.வெ.க., கூட்டணிக்கு தாவ போறீங்களா...? ஒருவேளை, 'எந்த கூட்டணியும் வேண்டாம்'னு தனித்து களம் இறங்க போறீங்களா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே!
பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., அருள்: ராமதாசை தலைவராக ஏற்று, அவருடன் பயணித்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார். கட்சியில் பிரிவு ஏற்படாவிட்டால், பா.ம.க., ஓட்டு வங்கி 2 சதவீதமாக சரிந்திருக்காது. என்னை பார்த்து சாக்கடை என வசைபாடுகிறார் அன்புமணி. அதனால், அவரது தலைமையை ஏற்க மாட்டோம். இனி பா.ம.க., இல்லை; புது கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என, ஆடி 18 முடிந்த பின் அறிவிப்போம்.
டவுட் தனபாலு: 'நீர் அடித்து நீர் விலகாது'ன்னு சொல்றது மாதிரி, அப்பாவும், மகனும் என்ன தான் அடிச்சுக்கிட்டாலும், கடைசியில ஒண்ணு கூடிட்டாங்க பார்த்தீங்களா... அப்பாவை நம்பி போன அவரது மகள் ஸ்ரீகாந்தியே இப்ப எங்க இருக்கார்னு தெரியாத சூழல்ல, நீங்க எல்லாம் எம்மாத்திரம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
