PUBLISHED ON : ஜூலை 18, 2026 02:27 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: முன்னாள் முதல்வர் காமராஜர் உடலை அரசு மரியாதையோடு, கொட்டும் மழையில் அடக்கம் செய்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 'காமராஜருக்கு மகன் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் கருணாநிதி செயல்பட்டார்' என, மூத்த காங்கிரஸ் தலைவர்களே தெரிவித்துள்ளனர்.
டவுட் தனபாலு: காமராஜர், தமிழக முதல்வராக ஒன்பது ஆண்டுகள் இருந்தவர்... எம்.பி.,யாகவும் இருந்திருக்கார்... அவருக்கு, தானாகவே அரசு மரியாதை தரப்படும்... அதேபோல, கொட்டும் மழையில உடல் அடக்கம் பண்ணக்கூடாதுன்னு ஏதோ சட்டம் இருந்த மாதிரியும், அதை மீறி கருணாநிதி உதவி செஞ்சது மாதிரியும் பேசுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி தலைவரான வீராசாமி, தி.மு.க.,வில் இருந்து விலகி, சமீபத்தில் த.வெ.க.,வில் இணைந்தார். அக்கட்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலராக இருந்த இவர், ஊராட்சியில் நடந்த பணிகளுக்கான தொகையை விடுவிக்க, நவீன் என்ற ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து, அவர் த.வெ.க.,வில் இருந்து நீக்கப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டார்.
டவுட் தனபாலு: லஞ்சத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது தான்... அதே நேரம், மாற்று கட்சிகளில் இருந்து த.வெ.க.,வுக்கு வருவோரது கடந்த கால வரலாறுகளையும் கொஞ்சம் புரட்டி பார்த்து, அவங்களை சேர்த்திருந்தால், இந்த மாதிரி தர்மசங்கடங்கள் ஆளுங்கட்சிக்கு வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் நிலைப்பாட்டை, இந்திய கம்யூ., கட்சி மேற்கொண்டால், அந்த முடிவை நாங்கள் வரவேற்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை, த.வெ.க., பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது போன்ற செயல்களை வி.சி.க., தொடர்ந்து கண்டித்து வருகிறது.
டவுட் தனபாலு: இந்த மாதிரி கொள்கை, கோட்பாடு எல்லாம் பேசுறவங்களை நம்பி, அஞ்சு வருஷங்களை ஓட்ட முடியுமா என்ற, 'டவுட்'ல தான், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை ஆளுங்கட்சி தரப்பு இழுத்துட்டு இருக்கு... அது இருக்கட்டும்... தி.மு.க., எது செஞ்சாலும், அதுக்கு முரட்டுத்தனமா முட்டு கொடுத்துட்டு இருந்த நீங்க, த.வெ.க.,விடம் மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
