PUBLISHED ON : ஜூலை 29, 2026 12:00 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார்: 'முந்தைய அரசு கடன் வைத்து சென்றது' என, முதல்வர் விஜய் வசனம் பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மட்டும், அவரது அரசு கூடுதலாக, 20,281 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது; இந்த ஆண்டில் இன்னும், 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
டவுட் தனபாலு: உங்க அ.தி.மு.க., அரசும், உங்களுக்கு பின் வந்த தி.மு.க., அரசும், மாநிலத்தின் கஜானாவை சுத்தமா, 'துடைச்சு' எடுத்துட்டு போயிட்டீங்க... மக்கள் நலத்திட்டங்களை தொடரணும்னா, கடன் வாங்கி தானே ஆகணும்... தமிழகம் இன்று கடன்கார மாநிலமா மாறியதற்கு பிள்ளையார் சுழி போட்டதே, ரெண்டு திராவிட கட்சிகளும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
----
தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தி.மு.க.,வை வழிநடத்தும் தகுதி தனக்கு உள்ளதா என்பதை, கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்தி, உதயநிதி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வை வழிநடத்த, துணை பொதுச்செயலர் கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என்பதை, தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும்.
டவுட் தனபாலு: என்னமோ, தி.மு.க.,வில் உட்கட்சி ஜனநாயகம் கொடிகட்டி பறப்பது மாதிரி, 'நிர்வாகிகளிடம் கருத்து கேட்கணும்'னு, சொல்றாரே... அந்த கட்சியில, கருணாநிதி குடும்பத்தினர் வச்சது தான் சட்டம்... அவங்க சொல்றது தான் வேதம்... அதை எதிர்த்து, யாரும் மூச்சு கூட விடமாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
-----
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: 'நீட்' தேர்வு விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 'மாணவர்கள் நலன் தவிர, எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை' என்பதை, செயலால் காட்டியுள்ளார் பிரதமர் மோடி. எனவே, தேச ஒற்றுமையை காக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும், தன் மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் துறந்துள்ளார். இதன் பெயர் தோல்வியல்ல; தார்மீகம்.
டவுட் தனபாலு: மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால, வேற வழியில்லாம மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா பண்ணியிருக்காரு... ஆனாலும், 'எங்களுக்கு தோல்வியில்லை'ன்னு ஜம்பமா பேசுறீங்களே... 'குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை' என்ற பழமொழிக்கு, சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
